• Jun 10 2026

நீதிமன்றத்தில் பலிக்காத ரவி மோகனின் திட்டம்... பரபரப்பை கிளப்பிய உத்தரவு.! நடந்தது என்ன.?

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இடைக்கால ஜீவனாம்ச வழக்கை விரைந்து முடிக்க விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தற்போது சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் மற்றும் இடைக்கால ஜீவனாம்சம் உள்ளிட்ட எந்தவொரு நிதி உதவியும் வழங்கப்படவில்லை எனக் கூறி ஆர்த்தி ரவி புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாததால், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய ஆர்த்தி ரவி, இடைக்கால ஜீவனாம்ச மனுவை விரைந்து விசாரிக்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த மனுவை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில், அந்த இரண்டு வார காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நடிகர் ரவி மோகன் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆர்த்தி ரவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், ஏற்கனவே வழங்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வழக்கை திட்டமிட்டபடி தொடர வேண்டும் என்றும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், தேவையான நிவாரணத்திற்காக குடும்ப நல நீதிமன்றத்தை அணுகலாம் என உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் ரவி மோகன் - ஆர்த்தி ரவி விவாகரத்து வழக்கில் இடைக்கால ஜீவனாம்சம் தொடர்பான விசாரணை மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது தற்போது திரையுலக மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement