தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் நோக்கர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளன. குறிப்பாக “மாற்று அரசியல்” என்ற கோஷத்துடன் வளர்ந்து வந்த நாம் தமிழர் கட்சி, இந்தத் தேர்தலில் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எழுச்சி, இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தல்களில் பல தொகுதிகளில் 2 மற்றும் 3ஆம் இடங்களைப் பெற்றுவந்த நாம் தமிழர் கட்சி, இந்த முறை பெரும்பாலான இடங்களில் 4 மற்றும் 5ஆம் இடங்களுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதோடு, டெபாசிட்டையும் இழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அங்கு தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு வெற்றி பெற்றுள்ளார்.
மேலும், கடந்த தேர்தல்களில் 7–8% வரை இருந்த வாக்கு வங்கி, இந்த முறை கணிசமாக குறைந்திருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் சீமான் பெற்றிருந்த ஆதரவு, தற்போது விஜய்யின் பக்கம் திரும்பியிருப்பது இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதுவரை திராவிடக் கட்சிகளை விமர்சித்து தனித்துப் போட்டியிட்ட சீமான், இனி வரும் தேர்தல்களில் தனது அரசியல் வியூகத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கூட்டணி அரசியல் அவசியமாக மாறும் நிலையில், தமிழக அரசியலில் “மாற்று அரசியல்” என்ற இடத்தை தற்போது முழுமையாக தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
Listen News!