தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை உருவாக்கியுள்ளார் நடிகர் மற்றும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக அமைந்தது இயக்குநர் சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’.
இந்தப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. அந்த கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ‘நூறு சாமி’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன், சமீபத்தில் ‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகள், மனித உறவுகள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை பேசும் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் அறிவிப்பிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் காணப்பட்ட நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘நூறு சாமி’ திரைப்படம் வருகிற 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழுடன் தெலுங்கிலும் படம் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
‘பிச்சைக்காரன்’ படத்தைப் போலவே இந்த கூட்டணியும் மீண்டும் வெற்றியை பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது.
Listen News!