தமிழக முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் இன்று, அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ளார்.
ஜேசன் சஞ்சயின் முதல் படம் என்பதால், வெளியீட்டுக்கு முன்பே ‘சிக்மா’ மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், படத்தைப் பார்த்தவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில், “சிக்மா நிறைய பொழுதுபோக்கு, நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் நிறைந்த சிறப்பான என்டர்டெய்னர். சந்தீப் கிஷன் தனது கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். ஜேசன் சஞ்சய் தனது அறிமுகத்திலேயே சிறப்பாக செயல்பட்டுள்ளார். கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்” என பாராட்டியுள்ளார்கள்.
அதேபோல், ஸ்டார் டாக்கிஸ் பக்கத்தில், முதல் பாதியில் கதையும் கதாபாத்திரங்களின் மோதல்களும் பெரிதாக கவரவில்லை என்றும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான காட்சிகள் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், “முதல் பாதி நன்றாக உள்ளது. ஆரம்பத்தில் சற்று மெதுவாக நகர்ந்தாலும் பின்னர் வேகம் பிடிக்கிறது. குறிப்பாக இடைவேளை காட்சி சிறப்பாக உள்ளது. சந்தீப் கிஷன் தனது நடிப்பால் முதல் பாதியை தாங்கியுள்ளார். தமனின் இரண்டு பாடல்கள் ஹைலைட்” என தெரிவித்துள்ளார்.
இதனால், ‘சிக்மா’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், ரசிகர்களின் முழுமையான தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது அடுத்தடுத்த காட்சிகளிலேயே தெரியவரும்.
Listen News!