• May 10 2024

விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளிவந்த 'அநீதி' படம்... திரை விமர்சனம் இதோ..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் 'அநீதி'. இப்படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜூன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா, சாந்தா தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அத்தோடு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

இப்படமானது ஒரு எளிய மனிதரின் கதையை மையமாக கொண்டமைந்துள்ளது. அதாவது முதலாளிகளால் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு என்னதான் தீர்வு என்பதை அழகாக இப்படத்தின் மூலமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் சாக்லேட்டை கண்டாலே கடுப்பாகும் அர்ஜூன் தாஸ் ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். இதில் உணவு டெலிவரி பாயாக வரும் அவருக்கு  துஷாரா விஜயனுடன் எதிர்பாராத விதமாக காதல் ஏற்படுகின்றது.

ஆனால் யாரும் சற்றேனும்  எதிர்பார்க்காத நேரத்தில் இருவரும் ஒரு குற்ற வழக்கில் சிக்கிக் கொள்கின்றனர். அதன்பின் இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நடந்தது என்ன? எளிமையான மனிதர்களுக்கு சட்டத்தினால் அநீதி இழைக்கப்பட்டதா? இல்லையா..? போன்ற கேள்விகளுக்கு விடையாக இப்படத்தினுடைய மீதிக்கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

இப்படத்துக்கு அர்ஜூன் தாஸ் தனது கதாபாத்திரத்திற்குத் தகுந்தபடி அமோகமாக நடித்திருக்கின்றார். அதாவது யாரும் இல்லாதவராக, மனநல பிரச்சினையால் கடுமையாக அவதிப்படுபவராக, காதலி வந்த பின் மகிழ்ச்சி கொள்பவராக, அந்தக் காதலியின் நம்பிக்கையை இழக்கும்போது உடைந்து போபவராக என அனைத்து சந்தர்ப்பங்களிலும் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

அதேபோன்று துஷாரா விஜயன் இப்படத்தில் பக்கத்து வீட்டு பெண்ணாக ரசிகர்களின் மனதைக் கவரும் வகையில் நடித்திருக்கின்றார். அந்தவகையில் தன் வாழ்வை  வீட்டின் தேவைக்காக அர்ப்பணிப்பது, முதலாளியிடம் சிக்கி அடிமையான வாழ்க்கை வாழ்வது, அவர்களை நினைத்து பயப்படுவது என பல விதத்திலும் ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டுள்ளார்.

மேலும் சாந்தா தனஞ்செயன் முதலில் பணக்காரராக வலம் வந்தாலும், தனிமையின் கொடுமை, பிள்ளைகளின் பாசாங்கு மனநிலையை உணரும் இடத்தில ப்ளஸ் பாய்ண்ட் வாங்கி இருக்கின்றார்.

அதுமட்டுமல்லாது வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜூன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா என அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர். 

படம் எப்படி?

அந்தவகையில் முதல் பாதியை விட இரண்டாம் பாதிக் கதை ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டியுள்ளது.

இருப்பினும் அர்ஜூன் தாஸ் கதாபாத்திரத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.  

அத்தோடு க்ளைமேக்ஸ் உட்பட படத்தில் இடம்பெறும் வன்முறை காட்சிகளின் வீரியத்தை சற்றே குறைத்திருக்கலாம். 

தொகுப்பு 

மொத்தத்தில் இப்படமானது அநீதிகளுக்கு குரல் கொடுக்கும் ஒரு படமாக அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பொறுமை இருந்தால் இப்படத்தை தியேட்டர்களுக்கு சென்று கண்டு களிக்க முடியும்.

Advertisement

Advertisement

Advertisement