• May 25 2026

தாத்தா பிஸ்கட் சாப்பிடுங்க.! ரோபோ சங்கர் ரசிகர்களை மீண்டும் கலங்க வைத்த குழந்தையின் செயல்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்தவர் ரோபோ சங்கர். கடந்த ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்தது, தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது.

காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், பின்னர் கதாநாயகனாகவும் ரசிகர்களை கவர்ந்தார். அவரது நடிப்பில் உருவான பல படங்களில், தற்போது ‘ஈகோ ராமன்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜி. சுதா தயாரிப்பில், கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரோபோ சங்கருடன் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, கவிதா ரமேஷ், சப்பாணி முரளி, சேரன் ராஜ், லதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இந்த படம் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ரோபோ சங்கர் மிகுந்த ஆசையுடன் நடித்ததாகவும், ஆனால் இன்று அவர் நம்முடன் இல்லாதது மனதை வலிக்கச் செய்கிறது என்றும் படக்குழுவினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், ‘ஈகோ ராமன்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ரோபோ சங்கரின் பேரன், நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த அவரது போஸ்டரை பார்த்ததும் ஓடிச்சென்று முத்தமிட்டு, கையில் இருந்த பிஸ்கட்டை அவருக்குக் கொடுத்த காட்சி அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த காட்சியை பார்த்த ரோபோ சங்கரின் மனைவி பிரியங்காவும், மகள் இந்திரஜாவும் கண்கலங்கினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Advertisement