தென்னிந்திய திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘அகண்டா 2’. முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதாலும், அதில் பாலகிருஷ்ணா வெளிப்படுத்திய அதிரடியான “ருத்ர தாண்டவம்” இன்னும் ரசிகர்களின் நினைவில் நீங்காததால், இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.

திட்டமிட்டபடி இன்று வெளியாக வேண்டியிருந்த இந்த படத்தை பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக, படம் திடீரென ரிலீஸாகாமல் தள்ளி போனதால், ரசிகர்களும் தெலுங்குத் திரையுலகமும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பெரும்பாலும் அவரது மாஸ் கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறார்கள். ‘அகண்டா’ முதல் பாகத்தில் அவர் வெளிப்படுத்திய பெரும் சக்தி மிக்க தோற்றம், குரல், நடிப்பு, அதிரடி… அனைத்தும் சேர்ந்து அந்த படத்தை ஒரு கலக்கலாக மாற்றியது.
அந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து, ‘அகண்டா 2’ படத்திலும் பாலய்யாவின் ருத்ர தாண்டவம் சூப்பராக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால் இன்று ரிலீஸாக வேண்டிய இந்த படத்திற்காக பல ரசிகர்கள் முன்பே திரையரங்குகளில் டிக்கெட்டுகளையும் பதிவு செய்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு கிடைத்தது பெரும் ஏமாற்றம் மட்டுமே. இந்த படத்தையும் முதல் பாகத்தின் இயக்குநரான போயாபதி சீனு தான் இயக்கியுள்ளார். பாலகிருஷ்ணா – போயாபதி சீனு இணைப்பு எப்போதும் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் ஃபீஸ்டாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் "எதிர்பாராத சூழ்நிலையால் அகண்டா 2 திரைப்படம் திட்டமிட்ட படி வெளியாகாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்போம்." எனக் கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!