நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம், பொங்கல் வெளியீடாக வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்சார் பிரச்சினைகள் காரணமாக நீதிமன்றம் வரை சென்றது. இதனால் படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகாமல் உள்ளது.

இந்த நிலையில், நேற்று சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு மேலாக, இன்று அதிகாலை மூன்று மணிநேரம் முழு படம் வெளியானதாக தகவல் வெளியாகி, படக்குழுவினரும் ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இப்படியான சம்பவம், படத்தின் வர்த்தகத்தையும், அதன் மீது உள்ள எதிர்பார்ப்பையும் பாதிக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு திரைப்படமும் நூற்றுக்கணக்கான மக்களின் உழைப்பால் உருவாகிறது. தயவுசெய்து திருட்டுத்தனத்தை தவிர்த்து, திரையரங்குகளில் வெளியாகும் வரை காத்திருந்து பாருங்கள்.
இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Listen News!