• May 29 2026

புற்றுநோயுடன் போராடி தோற்ற இயக்குநர்.! தமிழ் சினிமாவுக்கு மீண்டும் துயர செய்தி..

Aathira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில இயக்குநர்கள் ஒரு படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக கருதப்பட்டவர் இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம். இவர் இயக்கிய “வில் அம்பு” திரைப்படம் இன்று வரை பல ரசிகர்களால் நினைவுகூரப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளியான “வில் அம்பு” திரைப்படத்தில் நடிகர்கள் ஸ்ரீ மற்றும் ஹரிஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கையை இணைக்கும் வகையில் உருவான இப்படம், வித்தியாசமான திரைக்கதை மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் வழங்கியிருந்த நிலையில், ரமேஷ் சுப்ரமணியம் இயக்கியிருந்தார். படம் பெரிய அளவில் விளம்பரமின்றி வெளியானாலும், பின்னர் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வெற்றிப்படமாக மாறியது. குறிப்பாக ஹரிஷ் கல்யாண் மற்றும் ஸ்ரீ ஆகியோருக்கு இந்த படம் நல்ல அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

“வில் அம்பு” வெற்றிக்குப் பிறகு ரமேஷ் சுப்ரமணியம் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திரையுலகில் அமைதியாக இருந்து வந்தார்.


இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷ் சுப்ரமணியம் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று (மே 28) அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழக்கும் போது அவருக்கு வயது 49.

இவருடைய மறைவு செய்தி வெளியாகியதும், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்தினர் தெரிவித்த தகவலின்படி, கோவையில் உள்ள அவரது சொந்த ஊரான சுகுணாபுரத்தில் நாளை காலை இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சமீப காலமாக தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மறைவு செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ரமேஷ் சுப்ரமணியத்தின் மறைவும் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement