தென்னிந்திய திரையுலகில் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமண எதிர்பார்ப்புகள் குறித்து முதன்முறையாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்று வருகிறது.
மலையாள திரையுலகில் அறிமுகமாகிய ஐஸ்வர்யா லட்சுமி, பின்னர் தமிழ் சினிமாவிலும் தனது வித்தியாசமான நடிப்பால் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். ‘ஜகமே தந்திரம்’, ‘கார்கி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’, ‘மாமன்’, ‘தக் லைப்’ உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக அவர் வலம் வருகிறார்.
தற்போது விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள ‘கட்டா குஸ்தி–2’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா லட்சுமி, தனது மனதில் இருந்த எண்ணங்களை திறந்தவெளியில் பகிர்ந்துள்ளார். ஆரம்பத்தில் திருமணம் என்ற உறவுக்குள் நுழைவதில் தனக்கு பல தயக்கங்களும் குழப்பங்களும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “கட்டா குஸ்தி–2” படத்தில் ஒரு குழந்தையுடன் நடித்த அனுபவம், தன்னுள் இருந்த தாய்மை உணர்வை வெளிக்கொண்டு வந்ததாகவும், அதன்பிறகு திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்கத் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது வாழ்க்கைத் துணை குறித்து அவர் கூறுகையில், “எனக்கு வருபவர் நல்ல கணவராக மட்டுமல்ல, என் குழந்தைக்கு நல்ல தந்தையாகவும் இருக்க வேண்டும். நான் புரிந்துகொள்ளக்கூடிய, நம்பிக்கையுடன் வாழ்க்கையைப் பகிரக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
ஐஸ்வர்யா லட்சுமியின் இந்த மனம் திறந்த கருத்துகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
Listen News!