சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’, இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமூக மற்றும் அரசியல் பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த படம், வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான விவாதங்களை உருவாக்கி வருகிறது.

1960-ம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’, தமிழ் அடையாளம், மொழி அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை முன்வைக்கும் படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனைத் தவிர, ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
‘பராசக்தி’ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே பல திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளுடன் ஓடி வருகிறது. விசில், கைதட்டல் என ரசிகர்கள் படத்தை ஒரு திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, படத்தின் வசனங்கள், அரசியல் கருத்துகள் மற்றும் நடிகர்களின் நடிப்பு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயன், செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்தும், தணிக்கை வாரியம் தொடர்பான சர்ச்சைகள் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், தணிக்கை வாரியத்தின் முடிவுகள் குறித்து அமைதியான அணுகுமுறையுடன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, “சென்சார் வாரியத்துக்குனு தனியா ரூல்ஸ் இருக்கும். அங்க இருந்து படம் பாக்குறவங்களும் மனுஷங்க தான். அவங்களுக்கும் சில ஐடியாக்கள் இருக்கும். நேத்து கூட இந்த வார்த்தைய ஏன் மியூட் பண்ணனும்னு நிறைய பேர் கேட்டாங்க. அது அவங்களுக்கு தப்பா தெரிஞ்சிருக்கலாம்.” என்றார்.
இந்த கருத்து, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தணிக்கை குழுவை எதிர்க்கும் தொனியில் அல்லாமல், அவர்களின் பார்வையையும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் அணுகுமுறை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
Listen News!