தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் “இயக்குனர் இமயம்” என போற்றப்படுபவருமான பாரதிராஜா (84) இன்று அதிகாலை காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரது மகன் மனோஜ் மறைவுக்கு பின்னர் பாரதிராஜாவின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் அவர் உயிரிழந்தார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர். காலை 10 மணிக்கு பிறகு பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இசையமைப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று காலை 8.33 மணியளவில் நேரில் வந்து பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். சுமார் நான்கு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தி அவர் தனது இரங்கலை தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டார். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் பாரதிராஜாவின் இறுதி சடங்கு எங்கு நடைபெறும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுமா அல்லது சென்னையிலேயே அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுமா என்பது குறித்து குடும்பத்தினர் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Listen News!