தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி, திரையுலகில் தனது 25 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளார். 2001ம் ஆண்டு மே 25ஆம் தேதி அவரது முதல் திரைப்படமான ‘ஆனந்தம்’ வெளியாகியது. குடும்ப உறவுகளின் சிக்கல்களையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட இந்த படம், தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல் படத்திலேயே வெற்றி கண்ட லிங்குசாமி, தொடர்ந்து ரன், சண்டக்கோழி, பையா போன்ற வெற்றிப் படங்களை வழங்கி தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கினார். குறிப்பாக ‘ரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் மற்றும் ‘சண்டக்கோழி’ படத்தின் கிராமத்து ஆக்ஷன் கதை அமைப்பு ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
ஆனால், சில படங்கள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தின. ‘ஜி’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. அதன்பின்னர் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘அஞ்சான்’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வியை சந்தித்தது. இந்த காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன. அதனால் அவரது குடும்பமும் மனஅழுத்தத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, லிங்குசாமி தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோஸ் நிர்வாகத்தில் திருப்பதி பிரதர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்தார். கும்கி, கோலிசோடா, மஞ்சப்பை, வழக்கு எண் 18/9 போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றன.
இவர் கடைசியாக ராம் பொதினேனியின் 'தி வாரியர்' படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தோல்வியில் முடிந்தது.
இதை தொடர்ந்து அடுத்ததாக மிகப்பெரிய பட்ஜெட்டில் புராணக்கதை மையமாகக் கொண்டு திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாக அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!