தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக பதவியேற்று செயல்பட்டு வருகின்றார். இவர் சினிமா துறையில் இருக்கும்போதே தனது அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்களும் அதற்கு சான்றாகக் காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். அவர் கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே முதலமைச்சரானது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், சினிமா துறையிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மாரிதாஸ், சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல யூடியூபரான மாரிதாஸ், சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் தமிழக அரசின் செயல்பாடுகள், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சரவையின் பல்வேறு அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
குறிப்பாக, அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் செயல்திறன் குறித்து கேள்வி எழுப்பும் வகையிலான பதிவுகள் மற்றும் வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் வெளியிட்ட சில தகவல்கள் மற்றும் கருத்துகள் அவதூறானவை எனக் கூறி அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது நடவடிக்கையின்போது எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில், அவரது வீடு அமைந்திருந்த பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பின்னர் மாரிதாஸை போலீசார் காவலில் எடுத்து மேலதிக விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
இந்த வழக்கில் மேலும் என்னென்ன குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன, அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாரிதாஸ் கைது சம்பவம் தற்போது அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!