• Apr 26 2024

யார் அந்த மர்ம நபர்...? த்ரில்லராக வெளிவந்த 'தீர்க்கதரிசி' படத்தின் திரை விமர்சனம்..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பி.ஜி.மோகன்-  எல்.ஆர்.சுந்தரபாண்டி  ஆகிய இருவரும் இணைந்து இயக்கி இருக்கும் திரைப்படம் 'தீர்க்கதரிசி'.  இப்படத்தில் நடிகர்கள் சத்யராஜ், அஜ்மல், ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இப் படத்தினுடைய திரைவிமர்சனத்தை பார்ப்போம்,

கதையின் கரு

அந்தவகையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணி செய்கிறார் ஶ்ரீமன். அங்கு அடிக்கடி தேவையில்லாத போன் கால்கள் வந்து அவர்கள் வேலையை கெடுத்துக் கொண்டிருக்க, அது போன்றே ஒரு அழைப்பு வருகிறது. 

அதாவது காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் உயிரிழக்கப்போவதாக மர்ம நபரிடமிருந்து அழைப்பு வருகிறது. அதனை பிராங்க் கால் என போலீசார் நினைக்கும் நிலையில் நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து  உடனடியாக விசாரணை அதிகாரிகளாக ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் நியமிக்கப்பட, அண்ணா சாலையில் ஒரு விபத்து நடக்கப்போவதை முன்கூட்டியே அறிவிக்கிறார் அந்த நபர். அவர் சொன்னது போலவே அடுத்ததாக ஒரு விபத்து நிகழ்கிறது. 

இதனால் வழக்கு போலீஸ் உயரதிகாரியாக செயற்படும் அஜ்மலிடம் ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவு விசாரணை செய்தும் மர்ம நபரால் முன்கூட்டியே சொல்லப்படும் அடுத்தடுத்து நிகழும் அந்த அசம்பாவிதங்களை அஜ்மல் குழுவினர் துப்பறிய முடியாமல் திணறுகின்றனர். இதனையடுத்து மக்கள் அந்த மர்ம நபரை தீர்க்கதரிசி என அழைக்கின்றனர். உண்மையிலேயே தீர்க்கதரிசி யார்? அவருக்கும் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை க்ரைம் த்ரில்லர் பாணியில் இப்படத்தினுடைய மீதிக்கதை விவரிக்கிறது.

நடிப்பு எப்படி? 

தான் நடித்த எல்லா படங்களிலும் தன் இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்யும் அஜ்மல், இடையில் என்ன ஆனார் என்ற கேள்விக்கு பதிலாக வந்திருக்கிறது இந்தப் படம். ஓங்குதாங்கான உடலும் அதற்கேற்ற உடற்கட்டும் சிறந்த நடிப்பும் கொண்ட அஜ்மல் கையில் இந்நேரம் ஒரு டஜனுக்கும் அதிகமான படங்கள் நடித்திருக்க இருந்திருக்க வேண்டும். இதில் தன் பாத்திரத்தை உணர்ந்து அசாத்தியமாக நடித்திருக்கிறார்.

ஆகவே எங்கே தவறு இருக்கிறது என்பதைக்  கண்டுபிடித்து அஜ்மல் இனிமேலாவது முன்னணிக்கு வர முயற்சிக்க வேண்டும்.

மேலும் இதுவரை கதாநாயகர்களாக நடித்திருந்தாலும், தயங்காமல் இந்தப் படத்தில் இரண்டாவது நாயகர்கள் போன்ற வேடத்தில் நடித்திருக்கும் ஜெய் வந்தும் ஜெய் துஷ்யந்தும் தங்கள் நடிப்புக்கு நியாயம் சேர்த்துப் பாராட்ட வைக்கிறார்கள்.

அத்தோடு படத்தை ஆரம்பித்து வைக்கும் ஸ்ரீமன், கடைசியில் விடை தெரியாத கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் துப்பறிந்து உண்மைகளைக் கண்டுபிடிப்பதும் ரசிக்க வைக்கிறது.

சிறந்த நடிகரான ஶ்ரீமனையும் பார்த்து நீண்ட காலம் ஆகி விட, இடையில் சில படங்களில் காமெடியன் போல வந்தாலும் இந்தப் படத்தில் தனது பாத்திரத்தை நிறைவாக செய்து மனதில் இடம் பிடிக்கிறார் அவர்.

நாயகன் அஜ்மல் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை ஸ்ரீமன் கண்டுபிடிப்பதில் ஒரு டிவிஸ்ட் இருக்க அந்த ட்விஸ்ட் என்ன என்பது சுவாரஸ்யமான படத்தின் கட்டம்.

அதுமட்டுமல்லாது ஸ்ரீமனின் மனைவியாக வரும் தேவதர்ஷினியும் அப்பாவாக வரும் மோகன்ராமும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

இரட்டை இயக்குநர்கள் பிஜி மோகன் மற்றும் என் ஆர் சுந்தரபாண்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் இலக்கை நோக்கி ஜெட் வேகத்தில் பறந்து கொண்டிருப்பது ஆகப்பெரிய ஆற்றல்.

முக்கால்வாசிப் படம் சயின்ஸ் பிக்சன் போல நகர்ந்தாலும் படத்தின் கடைசி காட்சி நம் நினைப்பை குப்புறப் போட்டு சென்டிமெண்டில் இமயம் போல உயர்ந்து விடுகிறது.

மேலும் கடைசி ஒரு காட்சியில் மட்டும் வரும் சத்யராஜ் தன் நடிப்பால் நம்மை நெகிழவும், கலங்கவும், ரசிக்கவும் வைத்து விடுகிறார். அதாவது அவர் சொல்லும் காதல் காட்சியில் வரும் சம்பவங்கள் நாம் நிஜத்தில் கடந்தவை போல் இருப்பதும், ஒரு மணவாழ்க்கை முளையிலேயே கிள்ளி எறியப்படுவதும் மனதைக் கலங்கடிக்கிறது.

அத்தோடு முதலில் கடமைமிக்க காவல்துறை அதிகாரியாக வந்து கிளைமேக்ஸில் வேறொரு முகத்தை காட்டும் அஜ்மலின் கேரக்டர் சற்று எதிர்பாராத நிகழ்வாக உள்ளது. கடைசி 15 நிமிடங்கள் எண்ட்ரீ கொடுக்கும் சத்யராஜ், சில காட்சிகள் வரும் பூர்ணிமா பாக்யராஜ், நம்பும்படியாக இல்லாவிட்டாலும் தனி ஆளாக கதையின் ட்விஸ்டை வெளிக்கொணரும் ஸ்ரீமன், ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் என படத்தின் மெயின் கேரக்டர்கள் கவனிக்க வைக்கின்றனர்.

மேலும் ஹீரோயினே இல்லாத படம் என்பது கடைசி வரை தெரியாமல் கதையை கொண்டு சென்றுள்ளது இப்படத்தில் கவனிக்கத்தகுந்த விஷயம். 

படம் எப்படி?

இப்படமானது க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற கதை தான். பொதுவாக இப்படிப்பட்ட கதைகளில் எப்படி அந்த கதையின் முடிச்சு அவிழ்க்கப்படுகிறது என்பதில் தான் சுவாரஸ்யம் உள்ளது.  முதல் பாதி எந்த அளவுக்கு விறுவிறுப்பாக சென்றதோ, இரண்டாம் பாதி ஜவ்வாக இழுப்பது போல தோன்றுகிறது. அதேபோல் 2 மணி நேர படத்தில் கிட்டதட்ட கடைசி 15 நிமிடங்கள் தவிர மீதமுள்ள நேரங்கள் கொலைகளும், போலீஸ் விசாரணையும் தான் வந்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. 

அதேபோல் சின்ன தவறுகள் தான் என நினைத்து நாம் செய்யும் ஒவ்வொரு தவறுகளும் பின்னால் வாழ்க்கையை எவ்வளவு ஆழமாக பாதிக்கும் என இயக்குநர்கள் சொல்ல முயற்சித்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்கள். பின்னணி இசை ஆங்காங்கே கவனிக்க வைக்கிறது. 

தொகுப்பு 

மொத்தத்தில் யூகிக்கக்கூடிய காட்சிகள் இருந்தாலும், கொஞ்சம் பொறுமை இருந்தால், தியேட்டரில் நிச்சயம் இப்படத்தை ரசிக்கலாம்.

Advertisement

Advertisement

Advertisement