சூர்யா, ஜோதிகா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் காக்க காக்க.சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இந்தப் படத்தை இயக்கியிருந்தார் கௌதம் மேனன். இந்தப் படம் தற்போது 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.
ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது.இந்தப் படத்தில் சூர்யா -ஜோதிகா ஜோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ் தாணு தயாரித்திருந்த இந்தப் படத்தில் வில்லன்களாக நடித்திருந்த ஜீவன், டேனியல் பாலாஜி உள்ளிட்டவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. சூர்யாவிற்கு மிகச்சிறப்பான கமர்ஷியல் வெற்றியை இந்தப் படம் கொடுத்தது. இதன்மூலம் சாக்லேட் பாயாக வலம்வந்த அவர் ஆக்ஷன் ஹீரோவாக வடிவமடுத்தார்.
மின்னலே என்ற காதல் கதையை தொடர்ந்து காக்க காக்க என்ற ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எடுத்திருந்தார் கௌதம் மேனன். இந்தப் படத்தில் சூர்யா நடித்திருந்த அன்புச் செல்வன் கேரக்டர் அவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. சூர்யா என்றால் ரசிகர்களின் நினைவிற்கு வரும் சில படங்களில் முதலிடத்தில் காக்க காக்க படம் கண்டிப்பாக இடம்பெறும். ஆனால் முதலில் இந்தப் படத்தில் நடிக்கவிருந்தது நடிகர் சூர்யா இல்லை என்று தற்போது கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கதையை தான் விஜய்யை மனதில் வைத்தே முதலில் எழுதியதாக அவர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இந்தக் கதையை தான் விஜய்யிடம் கூறியபோது, க்ளைமாக்ஸ் காட்சிகளை எழுதவில்லை என்றும் தான் எப்போதும் சூட்டிங்கின்போதுதான் க்ளைமேக்ஸ் காட்சிகளை முடிவு செய்வேன் என்றும் கௌதம் மேனன் கூறியுள்ளார். இந்தக் காரணத்திற்காகத்தான் இந்தக் கதையை விஜய் நிராகரித்ததாகவும் கௌதம் மேனன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்தக் கதை அஜித், விக்ரம் மற்றும் மாதவன் ஆகியோரிடமும் கூறப்பட்டுள்ளது. அவர்களும் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்காமல் போக படம் சூர்யா கைகளுக்கு சென்றுள்ளது. இதையடுத்து சூர்யா சிறப்பான இந்தக் கதைக்களத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
Listen News!