தமிழ் சினிமாவின் வரலாற்றில் அழியாத தடம் பதித்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு, திரைத்துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கே பேரிழப்பாக அமைந்துள்ளதாக திரையுலகினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. பல தலைமுறைகளின் கனவுகளுக்கு அடித்தளம் அமைத்த ஒரு பெரிய ஆலமரமாக அவர் விளங்கியதாக திரையுலகினர் நினைவுகூர்கின்றனர்.
திரைப்படத் துறைக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலே, தமிழக அரசிடம் நேரடியாக எடுத்துச் சென்று அதற்கான தீர்வை பெற்றுத்தரக்கூடிய தலைவராக அவர் செயல்பட்டதாகவும், அவரது மறைவால் இன்று திரையுலகம் ஒரு பாதுகாப்பு அரணை இழந்துவிட்டதாகவும் அவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளனர்.
திரையுலகை தாண்டி, தமிழர் உரிமைகள் தொடர்பான பல்வேறு சமூகப் போராட்டங்களிலும் பாரதிராஜா முன்னிலை வகித்தவர். தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காக ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாநாடு முதல், தமிழர்களின் நலனுக்காக நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள் வரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் குரல் கொடுத்த போராளியாகவும் அவர் போற்றப்படுகிறார்.

மனிதநேயம் நிறைந்த, குழந்தை மனம் கொண்ட கலைஞனாக வாழ்ந்த பாரதிராஜாவின் மறைவு, திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக உடைத்துள்ளதாக இரங்கல் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாரதிராஜாவின் உடல் அவரது சொந்த மண்ணான தேனியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், நாளை தமிழ்த் திரைப்படத் துறையில் நடைபெற இருந்த அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் அனைவரும் இறுதி அஞ்சலியில் பங்கேற்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!