• Jun 10 2026

'சிக்மா ஸ்டைல்' வைரல் பாடல்.. ஷூட்டிங் ஸ்பாட் விடியோவை பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் திரையுலகில் அடியெடுத்து வைப்பது புதிதல்ல. ஆனால், ஒரு முன்னணி நடிகரின் மகன், நடிப்பைத் தவிர்த்து நேரடியாக இயக்குநராக களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

அந்த வகையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் இயக்குநர் முயற்சியாக ‘சிக்மா’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 இசையமைப்பாளர் தமன் இசையமைக்கும் இப்படத்தில் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷீலா ராஜ்குமார், அன்பு தாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.

திரைப்படத் துறையில் தன்னை முறையாகத் தயார்படுத்திக்கொள்ளும் நோக்கில், ஜேசன் சஞ்சய் கனடாவின் டொராண்டோ பிலிம் ஸ்கூலில் திரைப்படத் தயாரிப்பு தொடர்பான டிப்ளமோ படிப்பையும், பின்னர் லண்டனில் திரைக்கதை எழுதுதல் தொடர்பான பி.ஏ. ஹானர்ஸ் படிப்பையும் முடித்துள்ளார். மேலும், சில குறும்படங்களை இயக்கி அனுபவத்தையும் பெற்றுள்ளார்.


ஆக்ஷன் பின்னணியில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

அந்தப் பாடலில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் மற்றும் நடிகை கேத்தரின் தெரசா இணைந்து நடனமாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதேபோல், நடிகர் சந்தீப் கிஷனுடன் ஜேசன் சஞ்சயும் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன.

இந்த நிலையில், ‘சிக்மா ஸ்டைல்’ பாடலின் படப்பிடிப்பு தருணங்களை உள்ளடக்கிய மேக்கிங் வீடியோவை ஜேசன் சஞ்சய் தற்போது பகிர்ந்துள்ளார். படத்தின் ஒவ்வொரு கட்ட முன்னேற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தனது முதல் படத்தின் மூலம் இயக்குநராக அவர் எந்தளவிற்கு வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

வரும் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவுள்ள ‘சிக்மா’ திரைப்படம், ஜேசன் சஞ்சயின் இயக்குநர் பயணத்திற்கு வலுவான தொடக்கமாக அமையுமா அல்லது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை சந்திக்குமா என்பது திரையுலகில் அதிகம் பேசப்படும் கேள்வியாக உள்ளது.

Advertisement

Advertisement