தமிழ் திரையுலகில் தனித்துவமான இசையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர், தனது இசைப் பயணத்தின் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர்.
கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான மனசுக்கேத்த மகாராசா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது பாடல்கள் பல தலைமுறை ரசிகர்களிடையே இன்றளவும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
குறிப்பாக, 1990களில் இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் இசையுலகில் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்திலும், தேவா தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்தார். எளிமையான மெட்டுகள், துள்ளலான பாடல்கள் மற்றும் மக்களின் வாழ்வியலோடு இணைந்த இசை ஆகியவை அவரது அடையாளங்களாக அமைந்தன.
மேலும், தமிழ் சினிமாவில் கானா பாடல்களைப் பிரபலப்படுத்தியதில் தேவாவுக்கு முக்கியப் பங்குண்டு. கானா இசையமைப்பாளர் என்ற அடையாளத்தையும் அவர் பெருமையுடன் ஏற்றுக்கொண்டிருந்தார்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற ‘தேவா தேவாதான்’ இசை நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த், தேவாவின் இசைப் பங்களிப்பு குறித்துப் பாராட்டிப் பேசியிருந்தார்.
தமிழ் திரையிசையில் தனித்த அடையாளத்தை உருவாக்கிய தேவாவின் மறைவு செய்தி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!