• May 03 2024

பொன்னியின் செல்வன் பாகம் 1 இன் கதைச் சுருக்கம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். பல நட்சத்திரங்கள் நடித்த இப்படமானது செப்டெம்பர் மாதம் 30ம் திகதி பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படமானது பிரபல எடுத்தாளரான கல்கியின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாகும்.

கல்கி வார இதழில் 1950ஆம் ஆண்டில் துவங்கி சுமார் ஐந்தாண்டுகள் தொடராக வெளிவந்த ஒரு பிரம்மாண்டமான படைப்பு. புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களையும் 300க்கும் மேற்பட்ட அத்தியாயங்களையும் கொண்டது. 


இந்த நாவலில் மொத்தம் 55 பாத்திரங்கள். அதில் குறிப்பிடத்தக்க பாத்திரங்கள் 37. பத்தாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிக வலுவான பேரரசுகளில் ஒன்றாக விளங்கிய பிற்காலச் சோழர்களின் வரலாற்றைச் சுற்றிப் பின்னப்பட்ட கற்பனைக் கதையே 'பொன்னியின் செல்வன்.'

இந்த பிரம்மாண்டமான படைப்பைப் பற்றி ஆராய்வோம். அதாவது சுந்தரசோழ சக்கரவர்த்திக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். மூத்த மகன் ஆதித்த கரிகாலன். இரண்டாவதாக குந்தவையும் கடைசியாக அருள்மொழி வர்மனும் பிறந்திருந்தனர். இந்த அருள்மொழி வர்மனே வரலாற்றில் ராஜராஜசோழன் எனப் புகழ்பெற்றிருந்த மன்னன். சுந்தரசோழ சக்கரவர்த்தி சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு, நடக்க முடியாமலும் பிரயாணம் செய்ய முடியாத நிலையிலும் இருந்தார்.


அண்ணன் தம்பிகளான பெரிய பழுவேட்டரையரும் சிறிய பழுவேட்டரையர் காலாந்தக கண்டரும் அப்போது பெரும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள். சோழநாட்டின் பொக்கிஷம், வரி விதிக்கும் அதிகாரம் ஆகியவை பெரிய பழுவேட்டரையரிடம் இருந்தன. தஞ்சைக் கோட்டையின் காவல், சிறிய பழுவேட்டரையர் வசம் இருந்தது.

மூத்த மகன் ஆதித்த கரிகாலனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டிருந்தது. அவர் வடதிசைப் படையின் அதிபதியாக காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார். தென்திசைப் படையின் மாதண்ட நாயகராக அருள்மொழி வர்மன் இலங்கைக்குச் சென்று போர் புரிந்துகொண்டிருந்தார். அருள்மொழி வர்மன் குழந்தையாக இருந்தபோது, பெற்றோருடன் காவிரியில் படகில் சென்றுகொண்டிருந்தபோது, தவறி ஆற்றில் விழுந்துவிட்டான். அவனை ஒரு பெண் தண்ணீரிலிருந்து எடுத்துக் காப்பாற்றிவிட்டு மறைந்துபோனாள். அவள் யார் என்பது தெரியவில்லை.


காவிரி அம்மனே அவனைக் காப்பாற்றியதாகக் கருதி, அருள்மொழி வர்மனை பொன்னியின் செல்வன் என மக்கள் அழைத்து வந்தனர். 

சோழர்களின் தலைநகரம் தஞ்சைக்கு மாறிவிட்டாலும், குந்தவையும் வேறு பல சோழ அரச குடும்பப் பெண்மணிகளும் பழையாறை நகரிலேயே தங்கியிருந்தனர். இதற்கிடையில், சுந்தர சோழருக்கும் அவருடைய மகன்களுக்கும் எதிராக மிகப் பெரிய சதி நடப்பதாக நாடு முழுவதும் செய்திகள் பரவின. இந்த சதியின் மையமாக இருந்தவர் மதுராந்தகச் சோழன் சுந்தரசோழரின் பெரிய தந்தையான கண்டாராதித்த சோழனின் மகன்தான் இந்த மதுராந்தகன். சில காலம் முன்புவரை சிவபக்தியில் திளைத்திருந்த அவர், சின்னப் பழுவேட்டரையரின் மகளைத் திருமணம் செய்துகொண்டதிலிருந்து மன மாற்றம் அடைந்திருந்தார். சுந்தர சோழருக்குப் பிறகு மதுராந்தகரை சிம்மாசனத்தில் அமர்த்த வேண்டுமென்பது மேலே குறிப்பிட்ட சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது. 


காஞ்சிபுரத்தில் இருந்த பட்டத்து இளவரசனுக்கு இந்தச் செய்திகள் அரசல்புரசலாகத் தெரிந்ததும் தனது தந்தையை பழுவேட்டரையர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்டு, காஞ்சிபுரத்திற்குக் கொண்டுவர விரும்பினார். தான் புதிதாகக் கட்டியிருக்கும் பொன் மாளிகைக்கு வந்து சில காலம் சுந்தரசோழர் தங்கியிருக்க வேண்டும் என ஓலை ஒன்றை எழுதி, தனது நம்பிக்கைக்கு உரிய வல்லவரையன் வந்தியத்தேவன் என்ற வீரனிடம் கொடுத்தனுப்பினார்.ஆதித்த கரிகாலன் தனது இளம் வயதில் நந்தினி என்ற அர்ச்சகர் வீட்டுப் பெண்ணைக் காதலித்தார். ஆனால் அது தகாத காதல் என கண்டாராதித்தரின் மனைவியும் ஆதித்தனின் பாட்டியுமான செம்பியன் மாதேவி அவனிடம் சொன்னார். ஆனால், ஆதித்தனால் நந்தினியை மறக்க முடியவில்லை. 

இந்த நிலையில், 60 வயதைக் கடந்த பெரிய பழுவேட்டரையர் நந்தினியைத் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, நந்தினி பழுவூர் அரண்மனையின் சர்வாதிகாரியானார். யாரையும் தன் வழிக்குக் கொண்டுவரும் வசீகர சக்தி அவளிடம் இருந்தது. ஒரு முறை, ஆதித்த கரிகாலனிடம் பேசும்போது, சுந்தர சோழரை சிறையில் அடைத்துவிட்டு, பெரிய பழுவேட்டரையரைக் கொன்றுவிட்டு தன்னை மணந்துகொள்ளும்படி கேட்டாள் நந்தினி. இதற்கு ஆதித்தன் மறுத்துவிட்டாலும், அதற்குப் பிறகு அவனுக்கு தஞ்சாவூருக்குச் செல்வதென்றாலே பயமாக இருந்தது. ஆதித்த கரிகாலனின் ஓலையை எடுத்துக்கொண்டுவந்த வந்தியத்தேவன், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கியிருந்தபோது பழுவேட்டரையர் உள்ளிட்ட சோழ நாட்டுப் பிரமுகர்களின் சதியைப் பற்றித் தெரிந்துகொண்டான். அதன் பிறகு, தஞ்சாவூர் சென்று நந்தினியைச் சந்தித்து முத்திரை மோதிரத்தைப் பெற்றான். அதைப் பயன்படுத்தி சுந்தரசோழரைச் சந்தித்து ஓலையை அளித்தான். இதற்குப் பிறகு, பழுவேட்டரையர்கள் அவனைக் கைதுசெய்ய முயற்சித்தபோதிலும் அதிலிருந்து தப்பிய வந்தியத்தேவன், பழையாறையைச் சென்றடைந்தான். 


குந்தவையைச் சந்தித்து ஆதித்த கரிகாலன் கொடுத்த ஒலையைக் கொடுத்தான். அந்த சந்திப்பிலேயே குந்தவையிடம் உள்ளத்தைப் பறிகொடுத்தான். பிறகு குந்தவை கேட்டுக்கொண்டபடி, அருள்மொழி வர்மனைச் சந்திக்க இலங்கைக்குச் சென்றான். "ராஜ்யத்திற்குப் பேரபாயம் வந்திருக்கிறது. உடனே புறப்பட்டு வா" என ஒரு ஒலையை எழுதி அவனிடம் கொடுத்து அனுப்பினாள் குந்தவை. அதை எடுத்துக்கொண்டு வந்தியத்தேவன் இலங்கைக்குப் புறப்பட்டான். வந்தியத்தேவன் தன்னுடைய பயணத்தின்போது, ஆழ்வார்க்கடியான் என்ற வீர வைணவனைச் சந்தித்தான். அவன் நாடெங்கும் சென்று தகவல் சேகரிப்பது தெரிந்தாலும், யாருடைய சார்பில் பணியாற்றுகிறான் என்பது தெரியவில்லை. இதனால், அவனிடம் ஜாக்கிரதையாக இருந்தான் வந்தியத்தேவன். இதற்கிடையில் ஆதித்த கரிகாலனின் உள்ளம் குழம்பிப் போயிருந்தது. வந்தியத்தேவன் என்னவானான் என்ற தகவலும் தெரியவில்லை. தன்னுடைய தம்பிக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டு, வெளிநாடுகளுக்குச் சென்று போர் தொடுத்து வெற்றிகளை ஈட்ட விரும்பினான் ஆதித்த கரிகாலன். 

இதனால், அருள்மொழி வர்மனை வரவழைக்க தன்னுடைய நண்பனான பல்லவ குல பார்த்திபேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான் ஆதித்த கரிகாலன். கோடிக்கரை சென்ற வந்தியத்தேவன், அங்கிருந்த பூங்குழலி என்ற பெண்ணின் உதவியால் இலங்கையை அடைந்து, அருமொழி வர்மனைச் சந்தித்து குந்தவை கொடுத்த ஓலையைக் கொடுத்தான். அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் நெருக்கமான நண்பர்களாயினர். அப்போது இலங்கையில் தான் கண்டறிந்த சில அதிசயமான விவரங்களை அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனுக்குச் சொன்னார். அதாவது, சுந்தரசோழர் பட்டத்து இளவரசராவதற்கு முன்பாக இலங்கையை அடுத்த பூதத் தீவில் சில காலம் தங்க நேர்ந்தது. 


அங்கே அவரைத் தாக்கவந்த கரடியிடமிருந்து ஒரு பெண் காப்பாற்றுகிறாள். வாய்பேசவோ, கேட்கவோ இயலாத அந்தப் பெண்ணைக் காதலிக்கும் சுந்தர சோழர், சில காலம் அவளுடன் வாழ்கிறார். பிறகு அவளைப் பிரிந்து நாடு திரும்புகிறார். அந்த வாய்பேச முடியாத பெண்தான், பொன்னி நதியிலிருந்து அருள்மொழி வர்மனைக் காப்பாற்றியவள். இலங்கையிலும்கூட மேலும் பல அபாயங்களில் இருந்து அருள்மொழி வர்மனைக் காப்பாற்றுகிறாள் அந்தப் பெண். அந்தப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தது குறித்தும் அந்தக் குழந்தைகள் யார் என்பது குறித்தும் அருள்மொழி வர்மனுக்கு சில யூகங்கள் இருக்கின்றன. இதையெல்லாம் தன் தந்தையைச் சந்தித்து சொல்ல விரும்புகிறார் அருள்மொழிவர்மன். 

இதற்கிடையில், ஆதித்த கரிகாலன் அனுப்பிய பார்த்திபேந்திரனும் இலங்கையை வந்தடைந்து அருள்மொழிவர்மனைச் சந்திக்கிறான். தஞ்சாவூருக்கோ, பழையாறைக்கோ செல்லாமல் காஞ்சிபுரத்திற்கு வரும்படி சொல்கிறான் பார்த்திபேந்திரன். இதற்கிடையில், அருள்மொழிவர்மனைக் கைதுசெய்து அழைத்துப் போவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு கப்பல்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி சொல்கிறாள். இதையடுத்து தானே அவர்களிடம் சென்று சரணடையப் போவதாகச் சொல்லிச் செல்கிறார் அருள்மொழி வர்மன். ஆனால், அந்தக் கப்பல்களில் ஒன்று மூழ்கிவிடுகிறது. இன்னொரு கப்பலை அரேபியர்கள் சிலர் கைப்பற்றுகின்றனர். அரேபியர்கள் கைப்பற்றிய கப்பலில்தான் இளவரசர் அருள்மொழிவர்மன் இருப்பதாகக் கருதிய வந்தியத்தேவன் அந்தக் கப்பலில் ஏறுகிறான். ஆனால், அதே கப்பலில் ஏறும் பாண்டியநாட்டு ரவிதாஸனும் அவனுடைய தோழனும் அரேபியர்களைக் கொன்றுவிட்டு, வந்தியத்தேவனை கப்பலிலேயே கட்டிப்போட்டுவிட்டு, படகில் தப்பிச் செல்கிறார்கள். 


வந்தியத்தேவனை மீட்பதற்காக பார்த்திபேந்திரனுடன் அந்தக் கப்பலை பின் தொடர்ந்து செல்கிறார் அருள்மொழி வர்மன். இதற்கிடையில் வந்தியத்தேவன் இருக்கும் கப்பலை இடி தாக்கி, தீப்பிடிக்கிறது. இதையடுத்து, அவனை ஒரு படகில் சென்று காப்பாற்றுகிறார் அருள்மொழிவர்மன். ஆனால், இருவருமே கடல்கொந்தளிப்பில் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்களை அடுத்த நாள் காலையில் பூங்குழலி காப்பாற்றுகிறாள்.இத்துடன் இதன் முதல் பாகம் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement