பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜூலி, தற்போது மீண்டும் சர்ச்சையின் மையமாக மாறியுள்ளார். சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், தனது கணவர் முகமது இக்ரீமுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமான ஜூலி, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். அதன்பின் சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.
சமீபத்தில் காதலர் முகமது இக்ரீமை திருமணம் செய்து கொண்ட ஜூலி, தேர்தல் காலத்தில் திமுக ஆதரவாளராகவும், தமிழக வெற்றிக்கழகம் மற்றும் அதன் தலைவர் விஜயை விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், கிட்னி மோசடி விவகாரத்தில் தனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதாகவும், சமூக வலைதளங்களில் சிலர் தன்னை குறிவைத்து அவதூறு பரப்புவதாகவும் ஜூலி குற்றம்சாட்டியுள்ளார்.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜூலி, தனது வேதனையை வெளிப்படுத்தியபோது கண்கலங்கினார்.

இதன்போது அவர் கூறுகையில், கிட்னி தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. நான் யாரிடமும் பணம் வாங்கி மோசடி செய்யவில்லை. குழந்தைகளுக்கான சிகிச்சைக்காக மட்டுமே உதவி கேட்டு வீடியோக்கள் வெளியிட்டுள்ளேன். அதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன.
மேலும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து தன்னை அவமதித்து பதிவுகள் வெளியிடப்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர் தெரிவித்தார்.
அப்போது உணர்ச்சிவசப்பட்ட ஜூலி, எனக்கு திருமணம் ஆகி சில காலம்தான் ஆகிறது. எங்களின் முதல் குழந்தையை இழந்துவிட்டோம். தவெகவுக்கு எதிராக பேசினேன் என்பதற்காக சமூக வலைதளங்களில் என்னை கடுமையாக தாக்கினர். அந்த மன உளைச்சலால்தான் என் கரு கலைந்தது. என் குழந்தை உயிரிழந்ததற்கு விஜய் அண்ணாதான் காரணம் என்று கூறியுள்ளார்.
மேலும், தன்னைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் நடைபெறும் அவதூறு பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் ஜூலி வலியுறுத்தியுள்ளார்.
ஜூலியின் இந்த குற்றச்சாட்டு தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.
Listen News!