• Apr 27 2024

இது நடந்திருந்தால் என் கணவர் இறந்திருக்க மாட்டார்... மீனா எடுத்திருக்கும் அதிரடி முடிவு...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. கண்ணழகி என ரசிகர்களால் சிறப்பாகப் போற்றப்படும் இவரின் நடிப்பிற்கும், அழகிற்கும் மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்தளவிற்கு அழகான தன்னுடைய உடலமைப்பினால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருக்கின்றார்.


இவ்வாறாக சினிமா வாழ்க்கையில் கொடி கட்டிப் பறந்து வந்த நடிகை மீனா கடந்த 2009-ஆம் ஆண்டு வித்யாசகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இவர்களின் நல்வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக நைனிகா என்ற பெண் குழந்தை ஒன்று உண்டு. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இவரின் மறைவு மீனாவின் குடும்பத்தினரை மட்டுமின்றி தமிழ் திரையுலகில் உள்ள பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன் உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் மீனாவின் கணவர் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கணவரின் மறைவால் சோகத்தில் மூழ்கி இருந்த நடிகை மீனா தற்போது அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தள பக்கங்களில் தனது தோழிகளுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார்.



இந்நிலையில் நடிகை மீனா உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் குறித்து தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டுள்ள பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பதிவில் அவர் "ஒரு உயிரை காப்பாற்றுவதை விட சிறந்த விஷயம் உலகில் வேறு எதுவும் கிடையாது. அப்படி உயிரை காப்பாற்றக்கூடிய ஒரு சிறந்த விஷயம் தான் உடல் உறுப்பு தானம். 


அரியவகை நோயால் அவதிப்படும் பலருக்கு அதன்மூலம் மறுவாழ்வு கொடுக்க முடியும். தனிப்பட்ட முறையில் நானும் அதை என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறேன். எனது கணவர் சாகருக்கும் உடலுறுப்பு தானமாக கிடைத்திருந்தால் என்னுடைய வாழ்க்கையும் மாறி இருக்கும். என்னுடைய கணவர் இறந்திருக்க மாட்டார். ஒருவர் தன்னுடைய உடலுறுப்புக்களை தானம் செய்தால் 8 உயிர்களை காப்பாற்ற முடியும்' எனக் கூறியிருந்தார்.


மேலும் அவர் குறிப்பிடுகையில் "நீங்கள் அனைவரும் உடலுறுப்பு தானத்தின் உடைய முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இது தானம் செய்பவர்களுக்கும், அதன்மூலம் பயனடைபவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான விஷயம் அல்ல. இது சம்பந்தபட்டவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடையேயும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.


மேலும் "நான் எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறுதிமொழி எடுத்துள்ளேன். நம்முடைய புகழ் நிலைத்து நிற்க இதுவே சிறந்த வழி” எனவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


மீனாவின் இந்த முடிவுக்கு சாதாரண மக்கள் மட்டுமன்றி திரையுலகில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரல் செயலிழந்ததை அடுத்து அவருக்கு மாற்று உறுப்பு கிடைக்க மீனா பெரிதும் முயன்றார். ஆனால் அது கிடைக்காததால் தான் அவர் உயிரிழந்தார் என்பது நாம் அறிந்த ஒன்றே. இதனால் தான் அனுபவித்த கஷ்டத்தை மற்றவர்களும் அனுபவிக்க கூடாது என்று நினைக்கின்ற இந்த நல்ல மனசு நம்ம மீனாவை விட வேறு யாருக்கு தான் வரும்.

Advertisement

Advertisement

Advertisement