• Jun 11 2026

சாதிக்காமல் ஊருக்கு திரும்ப மாட்டேன்.! பாரதிராஜாவின் சபதத்தை நினைத்து கண்ணீர் விட்ட தங்கை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவுக்கு புதிய பாதையை காட்டிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது குடும்பத்தினரும் இன்னும் அந்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தேனி அல்லிநகரத்தில் உள்ள குடும்ப வீட்டில் வசித்து வரும் பாரதிராஜாவின் தங்கை பாரதி, தனது அண்ணனின் சிறுவயது நினைவுகளை பகிர்ந்துகொண்டபோது கண்கலங்கி பேசினார். அவர் பகிர்ந்த தகவல்கள், உலகம் கொண்டாடிய இயக்குநரின் மற்றொரு முகத்தை வெளிப்படுத்தியுள்ளன.

அதன்படி அவர் கூறுகையில், என் அண்ணனின் இயற்பெயர் சின்னச்சாமி. சினிமாவுக்கு வந்த பிறகுதான் அவர் பாரதிராஜா ஆனார். ஆனால் எங்கள் வீட்டில் அவர் எப்போதும் 'பால்பாண்டி'தான். அந்த பெயரில்தான் நாங்கள் அழைப்போம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

அண்ணன் மீது கொண்டிருந்த பாசத்தை நினைவுகூர்ந்த அவர், என்னை மிகவும் செல்லமாக பார்த்துக் கொள்வார். அதே நேரத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும், நன்றாக படிக்க வேண்டும் என்று கண்டிப்புடனும் வளர்த்தார். பாசமும் ஒழுக்கமும் சேர்ந்த ஒரு அண்ணனாக இருந்தார் என்றார்.


சிறுவயதிலேயே கலை மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த பாரதிராஜா, கிராமத்து இளைஞர்களை ஒன்றுசேர்த்து நாடகங்கள் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தாராம். அப்போதே அவர் பெரிய உயரத்தை அடைவார் என்ற நம்பிக்கை குடும்பத்தினருக்கு ஏற்பட்டதாக அவரது தங்கை கூறியுள்ளார்.

சென்னைக்கு புறப்படும் முன் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், ஒருநாள் வீட்டை விட்டு கிளம்பும்போது, 'நான் எப்படியாவது சாதித்து காட்டுவேன். வெற்றி பெறாமல் இந்த ஊருக்கு திரும்ப மாட்டேன்' என்று உறுதியாக சொன்னார். அந்த வார்த்தையை அவர் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றினார் என்று உருக்கமாக தெரிவித்தார்.

பாரதிராஜாவின் முதல் திரைப்படம் வெளியான நாள் குடும்பத்தினருக்கு ஒரு திருவிழாவாக இருந்ததையும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த படத்தை பார்த்து மகிழ்ந்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

அதன்படி, இன்று அவர் எங்களுடன் இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற நினைவுகளும், சாதனைகளும் என்றும் எங்கள் குடும்பத்தோடு வாழும். இந்த இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

திரையுலகம் கொண்டாடிய பாரதிராஜா, தனது குடும்பத்தில் ஒரு அன்பான அண்ணனாகவும், கனவை நம்பி போராடிய மனிதராகவும் வாழ்ந்தார் என்பதை அவரது தங்கையின் இந்த நினைவுகள் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளன.

Advertisement

Advertisement