• Sep 17 2024

பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கிறது? இலங்கை தமிழர்களின் விமர்சனம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வம் திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளனர். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மாபன் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

அருண்மொழி வர்மனும், வந்தியத் தேவனும் கடலில் மூழ்கிவிடுவது போல் முதல் பாகம் முடிந்த நிலையில், இரண்டாம் பாகம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளதா?பொன்னியின் செல்வன் 2 பாகத்திற்கு தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகள் திரையிடப்படவில்லை. அதே நேரத்தில், பிற பகுதிகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.

இலங்கையில் பொன்னியின் செல்வன் 2ஆம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை இரண்டாம் பாகம் பூர்த்தி செய்வதாக பலரும் தெரிவித்துள்ளனர். ஆதித்த கரிகாலன் - நந்தினி இடையேயான காட்சிகள் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர்.“முதல் பாகம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்புகளுடன் நான் வந்தேன். இரண்டாம் பாகம் எதிர்பார்ப்புகளை தாண்டி சிறப்பாக உள்ளது. கட்டாயம் பெரிய திரையில் பார்க்க வேண்டியப் படம். ஆதித்த கரிகாலன் - நந்தினி இடையேயான காதல் காட்சிகள் சிறப்பாக இருக்கிறது ” என்று ஒரு ரசிகர் தெரிவித்தார்.

“ஒரு நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த புத்தகம் பொன்னியின் செல்வன் என்று சூப்பர் ஸ்டார் சொல்லியிருப்பார். அதை பார்த்துதான் நான் பொன்னியின் செல்வன் நாவலை வாசிக்க தொடங்கினேன். புத்தகத்தை அப்படியே படமாக்கியுள்ளனர். இரண்டாம் பகுதி கண்கலங்க வைத்தது. ஆதித்த கரிகாலன் - நந்தினி இடையேயான காட்சிகள் நன்றாக இருந்தது. கலை, திரைக்கதை சிறப்பாக வந்துள்ளது. மணி ரத்னம் என்றால் சொல்லவா வேண்டும்? ஏ.ஆர்.ரகுமானும் இசையில் அசத்தியிருக்கிறார்.

“முதல் பகுதியை விட இரண்டாம் பகுதி நன்றாக இருந்தது. நந்தினி, குந்தவை கதாபாத்திரங்களை நன்றாக வடிவைத்துள்ளனர். விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்” என்று இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.

“ஆதித்த கரிகாலன் சிறந்த காதலன், சிறந்த அரசன். ஆதித்த கரிகாலனை மிகவும் பிடித்திருந்தது” என்று விக்ரமின் நடிப்பை வெகுவாக சிலேகித்து ரசிகர் ஒருவர் கூறினார்.

ஒருசிலர் நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராயின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக கூறினர்.

“ படம் சிறப்பாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மிகவும் பிடித்துள்ளது ” என பெண்மணி ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

படத்தில் எல்லாம் டாப் ஆக இருக்கிறது. கரிகாலன் கதாபாத்திரம் சிறப்பான வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ரசிகர் ஒருவர் குறிப்பிட்டார்.பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை போன்று 2ஆம் பாகம் இல்லை என்ற விமர்சனத்தை ஒருசில ரசிகர்கள் முன் வைத்தனர்.

“படம் சுமாராகதான் இருக்கு, முதல் பாகத்தை போன்று இல்லை. விக்ரம், ஐஸ்வர்யா ராயின் நடிப்பு மட்டும் பிடித்துள்ளது. ” என்று மற்றொரு ரசிகர் கூறினார்.

“படம் நல்லா இருந்தது. ஆனால், முதல் பாகத்தை போன்று சிறப்பாக இல்லை. முதல் பாகத்தில் நிறைய பாடல்கள் இருந்தன. இரண்டாம் பாகத்தில் பாடல்கள் இல்லை”

நாவலுடன் ஒப்பிடும்போது திரைப்படமாக பொன்னியின் செல்வன் வேறு விதமாக இருக்கிறதாக கூறும் ரசிகர்கள், ஒட்டுமொத்தத்தில் பொன்னியின் செல்வன் நாவலுக்கு முடிந்தளவு நியாயத்தை படம் செய்துள்ளது என்றனர்.

Advertisement

Advertisement