• Sep 09 2024

'ஜவான்' சம்பவம் பண்ணியதா..? சலிப்படைய வைத்ததா..? திரைவிமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'ஜவான்'. அத்தோடு நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

அந்தவகையில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. சமீபகாலமாக பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருக்கும் நிலையில் ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த முழு விமர்சனத்தைப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் படத்தின் கதை இந்திய எல்லையில் கதை தொடங்குகிறது. அங்கு குற்றுயிராக கிடக்கும் ஷாருக்கான் மீட்கப்பட்டு ஊர் மக்களால் காப்பாற்றப்படுகிறார் ஷாருக்கான். உயிர் பிழைத்த ஷாருக்கானுக்கு தான் யார் என்பது நினைவிலில்லை. இதனால் அவர் தான் யார் என்ற கேள்வியை எழுப்புகிறார். 

இதனையடுத்து "30 ஆண்டுகளுக்கு பிறகு" என்ற டைட்டிலுடன் தற்போதைய காலத்திற்கான கதை தொடங்குகிறது. அதில் ஷாருக்கான் மற்றும் அவருடன் சேர்ந்த 6 பெண்கள் அடுத்தடுத்து அரசுக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் இந்தியன் தாத்தாக்களாக மாறுகின்றனர். இவர்கள் தங்கள் தேவைகளாக மக்களுக்கு அவசியமானதை கேட்கிறார்கள். 

ஆனால் இவர்கள் கேட்டதை அரசாங்கமே செய்ய மறுக்கும் நிலையில், இதையெல்லாம் என்ன ஏதேன்று கேட்காமல் வில்லன் விஜய் சேதுபதி அசால்ட்டாக செய்து முடிக்கின்றார். இந்நிலையில் ஷாருக்கான் கூட்டத்தை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வருகின்றார். தான் தேடிவந்த குற்றவாளி ஷாருக்கான் தான் என நயன்தாராவிற்குத் தெரிய வருவதற்குள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. 

திருமணம் நடந்த அன்றைய தினமே நடந்த எல்லாவற்றையும் நயன்தாராவிடம் சொல்ல ஷாருக்கான் வருகின்றார். ஆனால் அதற்குள் உண்மை தெரிந்து அவரை நோக்கி நயன்தாரா துப்பாக்கியை நீட்டுகின்றார். அந்த சமயத்தில் இருவரும் எதிர்பாராதவிதமாக வில்லன் கூட்டத்தால் தாறுமாறாக தாக்கப்படுகிறார்கள். 

இவ்வாறாக ஷாருக்கானும் நயன்தாராவும் ரௌடிகளால் தாக்கப்படுகின்ற வேளையில் அவர்களை காப்பாற்றுவதற்காக அங்கு இன்னொரு ஷாருக்கான் வருகின்றார். இதன் பின்னர் நடந்தது என்ன..? இந்த இரண்டு ஷாருக்கான்கள் யார்?.. விஜய் சேதுபதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்..? போன்ற கேள்விகளுக்கு விடையாக இப்படத்தினுடைய மீதிக்கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆக்ஷன், டான்ஸ் என இரண்டிலுமே அதிரடி காட்டியுள்ளார்.

அதேபோன்று நயன்தாரா ஷாருக்கானுக்கு இணையாக ஆக்ஷனில் மிரட்டி இருக்கின்றார். 

மேலும் விஜய் சேதுபதி தனது வில்லத்தனமான நடிப்பை அமோகமாக வழங்கி இருக்கின்றார். இவருக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் சிறந்த பங்களிப்பினை வழங்கி ஸ்கோர் செய்துள்ளார். 

அதுமட்டுமல்லாது தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் படத்திற்குத் தேவையான நடிப்பை கச்சிதமாக வாழங்கியுள்ளனர்.


குறை, நிறை 

இடைவேளை வரை நன்றாக செல்லும் கதை  அதன்பிறகு எங்கே போகிறது என தெரியாமல் நகர்கிறது என்று சொல்லலாம்.

கிளைமேக்ஸ் உட்பட பல காட்சிகளளும் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை.

ஜவான் படத்தைப் பொறுத்தவரையில் காட்சிகளில் இருக்கும் சுவாரஸ்யம் கொஞ்சமாது கதையில் இருந்திருக்கலாம் என்று தான் சொல்ல வேண்டும்.

கதையை இழுத்தடித்து ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்கள். 

இவ்வாறாகப் பல குறைகள் இருந்தாலும், படத்திற்கு பெரும் பலம் அனிருத்தின் இசை மற்றும் விஷ்ணுவின் கேமரா மட்டும் தான் எனக் கூறலாம்.

தொகுப்பு

மொத்தத்தில் விஜய்யின் பிகில், மெர்சல், தெறி பட காட்சிகளை மையமாக கொண்டு தான் அட்லீ 'ஜவான்' படத்தை உருவாக்கி இருக்கின்றார். எது எவ்வாறாயினும் படம் ஓரளவிற்கு போரடிக்காது பார்க்கக் கூடியளவிற்கு உள்ளது.

Advertisement

Advertisement