• May 03 2024

உயிருக்குப் போராடும் தங்கை... திருடனாக மாறிய நாயகன்... 'பரம்பொருள்' படத்தின் திரைவிமர்சனம் இதோ..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் அரவிந்த் ராஜ் இயக்கத்தில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் 'பரம்பொருள்'. இதில் ஆர். சரத்குமார், அமிதாஷ், காஷ்மிரா பர்தேசி, பாலாஜி சக்திவேல், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள். 

மேலும் எஸ். பாண்டி குமார் ஒளிப்பதிவு  செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அந்தவகையில் சிலை கடத்தலை மையப்படுத்தி எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை கவி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் மற்றும் கிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்களம் 

அந்தவகையில் படத்தின் நாயகன் அமிதாஷின் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மிகவும் போராடி வருகிறார். அவரை காப்பாற்ற பல லட்சம் பணம் தேவைப்படுவதால் எப்படியாவது பணம் சம்பாதித்து, அதன் வாயிலாக தங்கையை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இறங்குகின்றார் அமிதாஷ்.

அந்தவகையில் சிலை கடத்தல்காரர் வீட்டில் இருக்கும் ஐம்பொன் சிலை ஒன்றை திருட முயற்சி செய்கின்றார் அமிதாஷ்.  அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வீட்டிலும் அவர் திருட முயற்சித்து, சரத்குமாரிடம் கையும் களவுமாக சிக்கிக்கொள்கிறார்.

இந்நிலையில் போலீஸ் வேலையை வைத்து எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு தூரம் அதிக அளவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கும் சரத்குமார், அமிதாஸ் சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பதை அறிந்து கொள்கின்றார். பின்னர் அமிதாஷ் மூலமாக சிலையை கைப்பற்றி அதை விற்பனை செய்து பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார் சரத்குமார். 

உயிருக்கு போராடும் தன் சகோதரியை காப்பாற்ற பணம் கிடைத்தே ஆக வேண்டும் என்கிற நிலையில் உள்ள அமிதாஷ், தனது சகோதரியை காப்பாற்ற தங்கையின் மருத்துவ செலவுக்காக சரத்குமாருடன் பயணிக்க சம்மதம் தெரிவிக்கிறார். 

இதனைத் தொடர்ந்து சரத்குமாரும், அமிதாஸும் இணைந்து 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை ஒன்றை கைப்பற்றி விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். அதே சமயம், சிலை கடத்தல் விவகாரத்தில் அமிதாஷை பலியாடாக்கி விட்டு பணத்துடன் எஸ்கேப் ஆகவும் சரத்குமார் திட்டம் போடுகின்றார். இந்நிலையில் இறுதியில் சரத்குமாரின் எண்ணம் பலித்ததா?, இல்லையா? அமிதாஷ் தன் தங்கையை காப்பாற்றினாரா..? போன்ற கேள்விகளுக்கு விடையாக இப்படத்தின் மீதிக்கதை அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு 

அந்தவகையில் பணம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் பயணிக்கும் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார் சரத்குமார். அதுமட்டுமல்லாது தனது ஒவ்வொரு அசைவுகளிலும் தான் மோசமான போலீஸ் என்பதை பல இடங்களில் நிரூபித்திருக்கிறார். 

அதேபோன்று நாயகனாக நடித்திருக்கும் அமிதாஷ், அப்பாவியான முகத்தோடு, ஆபத்தான சூழ்நிலைகளை அதிரடியாக சமாளிப்பது, தங்கையை காப்பாற்றுவதற்காக பணத்திற்குப் போராடுதல் என தனது நடிப்பை கச்சித்தமாக வழங்கியுள்ளார்.

மேலும் கதாநாயகியாக நடித்திருக்கும் காஷ்மீரா பர்தேசி, சிலை வடிக்கும் கலைஞராக நடித்திருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது சிலை கடத்தல்காரர்களாக வரும் வின்செண்ட் அசோகன் மற்றும் பாலகிருஷ்ணன் இருவரும் வில்லத்தனமான நடிப்பை அமோகமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


பலம் 

யுவன் ஷங்கர் ராஜாவின் பி.ஜி.எம். படத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பாக செயல்பட்டிருக்கின்றது.

திரைக்கதை படம் பார்க்கும் ரசிகர்களின் விறுவிறுப்பைத் தூண்டும் வண்ணம் அமைந்துள்ளது.


தொகுப்பு 

மொத்தத்தில் 'பரம்பொருள்' திரைப்படம் ஒரு த்ரில்லர் கதையாக அமைந்திருப்பதோடு ரசிகர்களை நுனி சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்க வைக்கின்றது. எனவே ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய படமாக இது உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement