• May 02 2024

அவ்வை ஷண்முகி : கெட்டப் கசியாமல் இருக்க கமல் போட்ட கண்டிஷன், கேட்காத ஜெமினி – ரமேஷ் கண்ணா சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அவ்வை சண்முகி” திரைப்படத்தில் Co Director ஆகப் பணியாற்றி, தெனாலி, பஞ்சதந்திரம், பம்மல் கே.சம்பந்தம், தசாவதாரம் படங்களில் கமலுடன் நடித்த தனது அனுபவங்களை பிரபல பத்திரிகைக்காக நடிகர், கதை வசனகர்த்தா, இயக்குநர் எனப் பன்முகத் திறன் வாய்ந்த திரு.ரமேஷ் கண்ணா பகிர்ந்து கொண்டது. உத்தண்டியில் “அவ்வை சண்முகி” ஷூட்டிங் நடைபெற்ற போது, இதிலே நடிக்கிற யாரும் இங்கே கெஸ்ட்டுகளை அழைத்து வரக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டார். அப்படி இருந்தும் ஜெமினி கணேசன் அவர்கள் டெய்லி யாரையாவது கூட்டிக் கொண்டு வந்து கமலிடம் அறிமுகப்படுத்துவார்.

கமல் தான் போட்டிருக்கும் மேக்கப் யாருக்கும் தெரியக்கூடாது என்று தான் யாரையும் அழைத்து வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டார். ஜெமினி சாரைக் கோபித்துக் கொள்ள முடியாதே….அப்போ அசடு வழிந்து சிரித்து, பேசமுடியாமல் தவித்து கமல் சார் அங்கிருந்து நழுவுவதற்குள் படாதபாடுபடுவார். பக்கத்திலிருக்கும் எங்களுக்கு இதைப்பார்த்ததும் சிரிப்புவர, அதை அடக்க நாங்கள் படும் கஷ்ட்டம் இருக்கிறதே..

விடியற்காலை 4 மணிக்கு எழுந்து மேக்கப்புக்காக ரெடியாவார். 4 மணி நேரம் ஆகும் மேக்கப் முடிய. அது முடிஞ்சதும் பார்த்தா “அவ்வை சண்முகி” யா மாறியிருப்பார் கமல். அந்த மேக்கப் 4 மணி நேரம் தான் முகத்தில் மோல்ட் இருக்கும். அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மெல்ட்டாகும். அந்த 4 மணி நேரத்துக்குள்ளே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கணும். இப்படி ஒருநாள், ரெண்டு நாள் இல்ல. 55 நாள் இதுமாதிரி பெண் வேடம் போட்டு கஷ்டப்பட்டு நடிச்சார் கமல்.

சண்முகியா பெண் வேஷம் போட்டாச்சுன்னா அவரால் சாப்பிட முடியாது. ஏதாவது ஜூஸ் தான் சாப்பிடுவார். இந்த நேரத்துல யாராவது கமலைத் தேடிக்கிட்டு வருவாங்க. அவங்க பக்கத்துலேயே தான் கமல் சார் இருப்பார். ஆனா வந்தவங்களுக்கு இவர யாருன்னு தெரியாது. அதனால பக்கத்துல இருக்கும் எங்ககிட்ட கேப்பாங்க, கமல் சார் எங்கேன்னு. நான் எப்பவுமே எல்லார்ட்டேயுமே ஜோக்காத் தான் பேசுவேன்.

பழகுவேன். அதுமாதிரி தான், அவங்க கேக்கும்போதெல்லாம் “இன்னிக்கி அவர் ஷீட்டிங் வரலே” னு ஜோக்கா சொல்லுவேன். அவங்களும் நம்பி போயிருவாங்க. சில பேர் பெண் வேஷத்துல இருக்கும் கமல் சாரிடமே வந்து “மேடம்…கமல் சார் எங்கே?” னு கேப்பாங்க. அவரும் பெண் குரலில் பேசி அவங்களை ஏமாற்றி அனுப்பிடுவார். ஒருநாள் அமெரிக்காவிலிருந்து புதுசா கேமரா ஒண்ணு வாங்கிட்டு வந்து, கேட்லாக்கைப் பார்த்து பார்த்து அதை இயக்க ஆரம்பிச்சார்.

திடீர்னு கேமரா சூடாகி புகை வந்துருச்சு. படக்குனு அதை ஐஸ்பாக்ஸில் போட்டு மூடிட்டார். “என்ன சார் இப்படி ஆயிருச்சு” என்றேன். “அட்வான்ஸா மார்க்கெட்டுக்கு வரும் பொருளை இப்படித்தான் தெரிஞ்சு பழகணும். கண்டகண்டபடி என்னை யூஸ் பண்றியானு கோபம் வந்ததுனால தான் கேமரா சூடாயிடுச்சு. கொஞ்சம் கூல் பண்ணுவோம்னு ஐஸ்பாக்ஸ்ல போட்டேன்” என்றார். எங்களுக்கெல்லாம் சிரிப்பை அடக்க முடியல. அப்புறம் அதை வெளியே எடுத்து ஒரு மணி நேரத்துல சரி செஞ்சி ஷூட் பண்ண ஆரம்பிச்சார்.

“தெனாலி” படத்தோட கதையைச் சொல்லி இதை படமாக்கியே தீரணும்னு கமல் சார் சொன்னார். எங்களுக்கு அதில் துளிகூட விருப்பம் இல்லே. “என்ன சார் இது? நீங்க படம் முழுக்க பயந்தாங்கொள்ளியா, கவலைப்படற மாதிரி நடக்கிறது ரசிகர்கள் மத்தியிலே எடுபடாதுன்னு மறுத்தோம். அவர் உடனே ரஜினிகிட்டேயே போய் கேப்போம்னு அவர்ட்ட இந்தக் கதையை சொன்னதும், அவருக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. படத்துக்கு “தெனாலி” னு பேர் வைச்சதும் ரஜினி சார்தான்.தெனாலி பட ஷீட்டிங்கில் பல லொக்கேஷன்களில் மாறி மாறி போய் படமாக்கினோம். அப்போ போற வழியிலே ஏதாவது ஏரி, குளங்களைப் பார்த்து விட்டால், என்னைத் தொப்புன்னு குதிக்கச் சொல்லி அதை ஷீட் செய்ய வைப்பார். “சார்….இப்படி கடுமையான குளிர்ல, இந்தக் கொடைக்கானல்ல ஏரியிலேயும், குளத்திலேயும் என்னைக் குதிக்க வைக்கிரீங்களே. ஏதாவது பூச்சி, பொட்டு இருந்து கடிச்சி வைச்சதுன்னா? என்று பரிதாபமாக சொன்னேன். அதுக்கு அவர் ரொம்ப கூலா, “முதலை இருக்கிற குளத்துலே, ஏரியிலே பூச்சி பொட்டு எதுவும் இருக்காது. பயப்படாதீங்க” னு சிரிக்காம அவர் சொல்ல, ஒட்டுமொத்த யூனிட்டுமே சிரிச்சு சிரிச்சு என்னை ஒரு வழி பண்ணிட்டாங்க.

இதேமாதிரி தான் “தசாவதாரம்” ஷூட்டிங்லேயும். கமல் சார் போட்ட ஒவ்வொரு வேடமும் அடேயப்பா…. அந்த ஜப்பான்காரர் மாதிரி வேஷம் போட்டு ஒரு இடத்தில் கமல் அமர்ந்திருந்தார். அவருக்குப் பக்கத்துலே நானும் உட்கார்ந்திருந்தேன். அந்த நேரத்துல நாகேஷ் சார் உள்ளே வரார். வந்து, “யப்பா….கமல்கிட்டே சொல்லிருப்பா நான் வந்துட்டேன்னு” என்றார். கமல் சாரோ ஜாடை காட்டி என்னை எதுவும் சொல்லாதேங்கிறார். எனக்கு சிரிப்பு வந்துருச்சு. ஒருவழியா நாகேஷ் சார்ட்ட போய் “இவர்தான் கமல் சார்” னு சொன்னேன். அவர் நம்பவே இல்ல.

திருவிளையாடல் தர்மி பாணியில், “எங்கிட்டே…எங்கிட்டேயே காமெடி பண்றியா” னு நாகேஷ் சார் சொல்லிட்டு இருக்கும்போதே கமல் சாராலேயே சிரிப்பை அடக்க முடியாம, நாகேஷ் சாரிடம் வந்து “நாந்தான் கமல்” னு சொன்னதும் தான் நம்பினார். இப்படி கமல் சார் கூட நான் ஒர்க் செஞ்ச படங்கள் எல்லாமே அவருக்கும் எனக்கும் ஆன புரிதல் என்பது ஆரோக்கியமாவேத் தான் இருந்தது. அதுமட்டுமில்லாம, திரையுலகிலேயே திரையுலகைப்பற்றி அதுவும் உள்ளூர் முதல் உலகத்திரையுலகம் வரை அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் ஒரே நபர் கமல்சார் தான்.

Advertisement

Advertisement

Advertisement