• Apr 27 2024

விஷால் நடிப்பில் வெளியான லத்தி சார்ஜ் படத்தின் திரைவிமர்சனம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகரான திகழும் நடிகர் விஷால் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்துள்ள இரண்டாவது திரைப்படம் 'லத்தி சார்ஜ்'. ஏ. வினோத் குமார் இயக்கத்தில் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் இரண்டும் வெளிவந்த பின், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். எனினும் அதுமட்டுமின்றி, விஷாலின் ஆக்ஷன் காட்சிகளை திரையில் காண ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களை லத்தி திரைப்படம் திருப்தி செய்துள்ளதா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்.. 

ஒரு நாள் இரவு காவல் நிலையத்திற்கு, தன்னை ஒருவன் காதலிக்க சொல்லி தொந்தரவு செய்வதாக புகார் அளிக்க பெண் ஒருவர் வருகிறார். அத்தோடு அந்த பெண்ணிடம் விசாரித்து அந்த பையனின் வீட்டில் எச்சரிகிறார் விஷால் { கான்ஸ்டபிள் முருகானந்தம் }. அத்தோடு அடுத்த நாள் காலை அந்த பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

இதன்பின்னர்  அந்த பெண்ணை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்த பையனை கைது செய்து விசாரணை செய்கின்றனர். ஆனால், தான் அந்த பெண்ணை கற்பழிக்கவில்லை என்று அவன் கூற, லாக்கப்பில் அந்த பையனை விஷால் அடித்து உதைக்கிறார். அந்த  சமயத்தில் அந்த பெண் தனது மரண வாக்குமூலம் கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறார்.

அந்த பெண் கூறியது போல் உள்ள அடையாளங்கள் இந்த பையனுடன் ஒத்துப்போகவில்லை என்பதால் லாக்கப்பில் வைத்து தவறு செய்யாத ஒருவரை அடித்ததற்காக விஷாலை 1 வருடம் இடைக்கால நீக்கம் செய்கிறார்கள். ஆனால், தனக்கு தெரிந்த உயர் அதிகாரியின் நண்பரான டி.ஜி.பி பிரபுவின் சிபாரிசின் மூலம் 6 மாதத்திற்குள் மீண்டும் வேலையில் சேர்ந்துவிடுகிறார்.



மேலும் இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் சென்னையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரபல தாதா சுறாவின் மகன் வெள்ளை, டி.ஜி.பி பிரபுவின் மகளிடம் தகாத முறையில் நடந்துகொள்கிறார். இதை அவர் தனது தந்தை பிரபுவிடம் கூற, டி.ஜி.பியாக இருந்தும் தாதா மகனை பிரபுவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

அந்த சமயத்தில்  தனியாக பிரபுவிடம் சிக்கிக்கொள்கிறார். வெள்ளையை அப்படியே கடத்தி யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் கொண்டு செல்கிறார் பிரபு. அவனை அடித்து நடக்க முடியாமல் செய்யவேண்டுமென்பதற்காக லத்தி ஸ்பெஷலிஸ்ட் விஷாலை வரவைக்கிறார்.

விஷாலும் வெள்ளையை வெளுத்து வாங்கி விடுகிறார். என்னதான் வெள்ளையின் முகத்தை கவர் செய்து அடித்தாலும், அவன் விஷாலின் முகத்தை பார்த்து விடுகிறான். இதன்பின், வெள்ளை விஷாலையும் அவனுடைய குடும்பத்தையும் கண்டுபிடித்துவிடுகிறான். இதனால், விஷாலின் குடும்பத்திற்கு என்ன ஆனது? ஒரு கான்ஸ்டபிளாக இருந்து கொண்டு மிகப்பெரிய தாதாவை எப்படி விஷால் எதிர்தார் என்பது தான் படத்தின் மீதி கதை.   


அத்தோடு வழக்கம் போல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் விஷால். ஆனால், இதுவரை செய்யாத அளவிற்கு ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார். அவர் ஒருவருடைய உழைப்பு மட்டுமே படத்தை தாங்கி நிற்கிறது. ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தன்னுடைய உயர் அதிகாரியின் உத்தரவின் கீழ் எப்படி நடந்துகொள்வாரோ அதே போல் சிறப்பாக நடித்துள்ளார்.

கதாநாயகியாக வரும் சுனைனா தனக்கு கொடுத்ததை செய்துள்ளார். வில்லனாக வரும் ரமணாவின் நடிப்பு ஓகே. அவருடைய தந்தையாக நடித்தவர் வில்லனாக இருந்தாலும், படத்தை பார்ப்பவருக்கு வில்லனாக தெரியவில்லை. விஷாலின் குழந்தையாக நடித்த சிறுவன் நன்றாக நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் நடிப்பு .

ஏ. வினோத் குமார் எடுத்துக்கொண்ட கதைக்களம், மேக்கிங் ஓரளவு புதிதாக இருந்தாலும் அது எடுபடவில்லை என்று தான் சொல்லவேண்டும். முதல் பாதி சற்று பொறுமையாக நகர்கிறது. இரண்டாம் பாதி முழுமையான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம்பெறுகிறது. சில இடங்கள் ரசிக்கும்படியான ஆக்ஷன் இருந்தாலும், பல லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது.

எனினும் குறிப்பாக, ஒரு மனிதனை உடலில் உள்ள பல இடங்களில் அடித்தும், கத்தியால் குத்தியும் மீண்டும் எழுந்து சண்டை போடுகிறார். இதுவே ரசிகர்களுக்கு ஷாக்கை கொடுக்கிறது. இதனால், சில நல்ல காட்சியை கூட ரசிக்க முடியாமல் போகிறது. திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவு.

ஆனால், போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை வைத்து இயக்குனர் கையாண்ட விதம் மிகவும் புதுமை.அத்தோடு  ஸ்டண்ட் காட்சிகளை இயக்கிய பீட்டர் ஹேயின் மாஸ்டருக்கு தனி பாராட்டு. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எடுபடவில்லை. ஆனால், பின்னணி இசை படத்திற்கு பலம். அவிக் பேனர்ஜி எடிட்டிங் ஓகே. ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார் பாலசுப்பிரமணியம்.    


பிளஸ் பாயிண்ட்

விஷால் நடிப்பு

ஆக்ஷன் காட்சிகள்

ஒளிப்பதிவு


மைனஸ் பாயிண்ட்

பல இடங்களில் லாஜிக் மிஸ்டேக்

சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை

மொத்தத்தில் விஷால் ஒருவரின் ஆக்ஷனுக்காக மட்டுமே படத்தை பார்க்கலாம்..   

Advertisement

Advertisement

Advertisement