சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் தான் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்ததால் தற்போது அவர் ஓய்வு எடுக்க அபுதாபிக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இன்று காலை ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் அபுதாபி செல்லும் விமானத்தில் சென்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அவரை நோக்கி ’தலைவரே’ என்ற கோஷமிட்ட காட்சிகளையும் காண முடிந்தது.
அபுதாபியில் ரஜினிகாந்த் ஒரு வாரம் தங்கி இருக்க போவதாகவும் அங்கு அவர் ஓய்வு எடுத்த பின் இந்த மாத இறுதியில் சென்னை திரும்புவார் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ’கூலி’ படத்தில் நாயகி யாரும் கிடையாது என்றும் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பான செல்லும் திரைக்கதை என்றும் பாடல்கள் கூட இந்த படத்தில் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
Listen News!