திரைப்பட உலகில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் விவாதமாகி வருகின்றது. அது என்னவென்றால், நடிகை கௌரி கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘அதர்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் செய்தியாளர் சந்திப்பும் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் படத்தின் கதாநாயகன் ஆதித்யா மாதவன், நாயகி கௌரி கிஷன், இயக்குநர் மற்றும் தயாரிப்பு குழுவினர் பங்கேற்றனர்.
அந்த நிகழ்வில், யூடியூபர் ஒருவர் தனது வினோதமான கேள்வியால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் கதாநாயகனிடம், “இந்தப் படத்தின் பாடலில் ஹீரோயினை தூக்கினீர்களே, எவ்வளவு வெயிட் இருந்தார்?” என்ற கேள்வியை கேட்டிருந்தார்.
இந்த கேள்வி பெண் நடிகையை கேலி செய்யும் வகையில் இருந்ததாகவும், நிகழ்வின் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமற்றதாகவும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சம்பவத்துக்குப் பிறகு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கௌரி கிஷன் தனது மனஅழுத்தத்தை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, “எனது எடை குறித்து இது போன்ற முட்டாள்தனமான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இத்தனைக்கும் அவர்கள் அனுபவம் வாய்ந்த, வயதான யூடியூபராக இருந்து கொண்டு இப்படிப் பேசுவது முறையானது அல்ல. ஒரு பெண் நடிகை குறித்து பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்திருந்தார்.
அவரின் இந்தக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவி, ரசிகர்களும் பல பிரபலங்களும் கௌரிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். சம்பவம் பெரிதாகி சர்ச்சை தீவிரமானதைத் தொடர்ந்து, அந்த யூடியூபர் நேற்று மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் அவர், “நான் கேட்ட கேள்வி தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. கௌரி கிஷனை வருத்தப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அதற்காக மனமார்ந்த மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியிருந்தார்.

தற்போது, இந்த விவகாரம் தொடர்பில் அதர்ஸ் படக்குழு தங்களின் வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். அதில், “செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம் குறித்து நடிகை கௌரி கிஷனிடம் நாங்கள் மனமார்ந்த மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். எங்கள் குழுவினர் உடனடியாக அந்த யூடியூபரின் தவறான கேள்வியை எதிர்த்து கருத்து தெரிவிக்காததற்கு வருந்துகிறோம். இனி இப்படியான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளனர்.
Listen News!