• Apr 27 2024

என்னைப் பேச வேண்டாம் என்றால் தான் அதிகமாகப் பேசுவேன்- சர்ச்சைகளுக்கு பதில் சொன்ன யூடியூப் TTF வாசன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். தனது யூடியூப் பக்கத்தில் தனது பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்து, அது தொடர்பான டிராவல் வீடியோக்களை வெளியிட்டு வருவதால், பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்,  டிடிஎப் வாசனுக்கு குவிந்த கூட்டத்தை கண்டு 90ஸ் கிட்ஸ்கள் ஆச்சரியப்பட்டு போயினர்.  ஆனால் அவ்வப்போது இவர் ரசிகர்களை சந்திக்கும்போது கூட்டம் கூடுவதால், இவர் மீது வழக்குகள் பதிவாகின. அதன் பின்னர் சமீபத்தில் காரில் பயணம் மேற்கொண்டிருந்த டிடிஎப் வாசன், பைக்கில் சென்றால் தானே பிரச்சனை வரும். இப்போது காரில் போகிறேன் என கூறியிருந்தார். இதனிடையே சென்னையில் வாசன் பயணம் செய்த காரில் பதிவு எண் இல்லாமல் இருந்தது போக்குவரத்து விதிமுறையை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. 


இதனிடையே அந்த கார் அவரது நண்பருடையது என்பதும் சில தினங்களுக்கு முன்பு வாங்கிய கார் என்பதால் நம்பர் போர்டு இல்லாமல் ஓடியதும் தெரிய வந்தது.இப்படி பல பிரச்சனைகளை எதிர்கொண்ட டிடிஎப் வாசன், ஒரு சூழலில் தொடர்ந்து தன்னை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து பேசியபோது, "கால் வைக்கிற இடம் எல்லாம் கண்ணி வெடியா இருக்கு." என குறிப்பிட்டிருந்தார். எனினும் தற்போது உற்சாகமாக பேசிவரும் டிடிஎப் வாசன் அடுத்த வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் டிடிஎப் வாசன் தன்னுடைய ரசிகர்களுடன் தமது சமூக வலைதளம் வழியாக உரையாடும் பொழுது அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருந்தார். இந்த கேள்விகளில் ரசிகர் ஒருவர், “வாசன் இனிமேல் உங்கள் மீது கேஸ் போட்டு விட்டார்கள் என்பதால் நீங்கள் இனி எந்த பிரச்சனைகளிலும் அதிகம் பேச மாட்டீர்களா?” என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த டிடிஎப் வாசன், “இனிமேல் பேச மாட்டேனா? கேஸ் வாங்கினால் தான் அதிகமாக பேச வேண்டும் என்று தோன்றுகிறது. உதாரணமாக என்னுடைய நண்பர் என்னிடம் பைக்கை கொடுத்து கொஞ்சம் ஒட்டி விட்டு தர சொன்னால், அப்போதுதான் அதிகமாக அந்த பைக்கை ஓட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றும், அதுபோல பேசும்போது யாராவது பேசக்கூடாது என்று சொன்னால் அப்போதுதான் நான் கண்டிப்பாக பேசுவேன், எனக்கு அப்போதுதான் பேச தோன்றும். ஆக இனிமேல் எந்த ஒரு விஷயம் நடந்தாலும் சாட்டிலைட் மீடியா பேசாமல் இருந்தால் நிச்சயமாக நான் பேசுவேன்.” என்று தெரிவித்தார்.


இதேபோல் இன்னொரு ரசிகர் ஒருவர்,  “டிடிஎப் வாசன்.. நீங்கள் அதிகமாக கேஸ் வாங்குகிறீர்களே? தமிழ்நாட்டின் மீது உங்களுக்கு வருத்தம் உண்டாகவில்லையா? இங்கு இல்லாமல் வேறு எங்காவது இருந்திருந்தால் இத்தனை பிரச்சனை இல்லை என்று உங்களுக்கு தோன்றவில்லையா?” என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த டிடிஎப் வாசன், “எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. சின்ன வயதில் இருந்தே இது நம் தமிழ்நாடு. தமிழ்நாட்டை விட்டு நான் எங்கே செல்ல முடியும்? நார்த் பக்கம் போனால் ஹிந்தி பேசுகிறார்கள். எனக்கு ஹிந்தி தெரியாது. ஹிந்தி கற்றுக்கொள்ள ஆர்வமும் இல்லை. கேரளாவில் நாங்கள் இப்போது சுற்றிக்கொண்டிருக்கிறோம். இங்கு மலையாளம் பேசுகிறார்கள், அந்த மலையாளத்தை கூட கற்றுக் கொள்ள ஆர்வம் இருக்கிறது. ஆனால் இந்தி கற்றுக்கொள்ள ஆர்வம் வருவதில்லை. ஆனால் ஹிந்தி நமக்கு தேவையாக இருக்கிறது. தமிழ்நாட்டின் மீது கோபமாக இருக்கிறேனா இல்லையா என்றால் நிச்சயமாக இல்லை. என்னை எதிர்க்க அவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றால், இங்கே என்னை கொண்டாடுவதற்கு இவ்வளவு பேர் இருக்கிறீர்களே? இதை விட வேற என்ன எனக்கு வேண்டும்” என நெகிழ்ச்சியுடன் பேசினார்.




Advertisement

Advertisement

Advertisement