• Jul 01 2024

'எறும்பு' திரைப்படம் எப்படி இருக்கு? - முழு விமர்சனம் இதோ!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் விவசாயக் கூலியான அண்ணாதுரை (சார்லி).

முதல் மனைவி இறந்துவிட, மகள் பச்சையம்மா (மோனிகா சிவா), மகன் முத்து (சக்தி ரித்விக்), இரண்டாம் மனைவி சூசன் ஜார்ஜ் அண்ணாதுரைக்கும் கமலத்திற்கும் பிறந்த கைக்குழந்தை, அண்ணாதுரையின் தாய் பொம்மி (பல்ரவை சுந்தராம்மாள்) ஆகியோருடன் கடனிலும் வறுமையிலும் நாட்களைக் கடத்தி வருகிறார் அண்ணாதுரை.

இந்நிலையில், கந்துவட்டிக்காரர் ஆறுமுகத்திடம் (எம்.எஸ்.பாஸ்கர்) வாங்கிய முப்பதாயிரம் ரூபாய்க் கடனை அடைக்க முடியாததால், ஆறுமுகத்தின் ஊர் முன் அவமானப்படுகிறார். மொத்த கடனையும் வட்டியுடன் அடைக்க, அண்ணாதுரையும் கமலமும் 15 நாள்களுக்கு வெளியூருக்குக் கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்கிறார்கள்.

தாயை இழந்து வாடும் தம்பிக்கு ஆறுதலாக இருக்கும் தருணங்கள், சித்தியிடமிருந்து தம்பியைக் காக்கும் இடங்கள் என எல்லா காட்சிகளிலும் பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார் மோனிகா சிவா. சிறுவன் சக்தி ரித்விக்கும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.

பாசக்கார தந்தையாகவும், ஏழ்மையில் அவமானப்படும் குடும்பத் தலைவனாகவும் வரும் அண்ணாதுரை கதாபாத்திரத்திற்கு சார்லியின் அனுபவ நடிப்பு ஒருபக்கம் பலம்தான் என்றாலும், அவரின் வழக்கமான முகபாவனைகளும் உடல்மொழியும் இன்னொரு பக்கம் பின்னடைவாகவும் இருக்கின்றன. சூசன் ஜார்ஜும், எம்.எஸ்.பாஸ்கரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள். ஜார்ஜ் மரியானின் நடிப்பு சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் மற்ற இடங்களில் ஓவர் டோஸாகவே இருக்கிறது.

இரண்டாம் பாதியில் தொடர்ச்சியாக வரும் பாடல்கள் பொறுமையைச் சோதிக்கின்றன. நத்தை பொறுக்குவது, புளியங்கொட்டை பொறுக்குவது, நிலக்கடலை உடைப்பது எனச் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருந்தும், அதைக் கதையோட்டத்திற்குத் தேவையான காட்சிகளாக்கிப் பயன்படுத்தாமல், மாண்டேஜ்களாகவும், பாடல்களாகவும் சுருக்கியிருக்கிறார்கள். காசு சேர்ப்பதற்காகச் சிறுவர்கள் செய்யும் விதவிதமான வேலைகளும் அதில்வரும் சிக்கல்களும் மட்டுமே ஓரளவு சுவாரஸ்யத்தைக் கொண்டுவர முயற்சி செய்திருக்கின்றன.


Advertisement

Advertisement