• Apr 27 2024

விடைகொடு எங்கள் நாடே... இலங்கை அகதியாக விஜய் சேதுபதி நடித்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் திரை விமர்சனம் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


கதைக்களம் 

இப்படமானது இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினைகளை பற்றிப் பேசுகிறது. அதாவது விஜய் சேதுபதி ஒரு இலங்கை தமிழர். இசையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர் சிங்கள ராணுவ தாக்குதலில் தப்பி அகதியாக இந்தியா வருகிறார். அங்கு வந்த இவர் கேரளாவில் இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் வேலைக்கு சேர்கிறார். 

பின்னர் ஒரு கட்டத்தில் தமிழகத்துக்கு வரும்போது அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீஸ் விஜய் சேதுபதியை கைது செய்கிறது. விஜய்சேதுபதியை லாக்கப்பில் இருந்து வெளியே அழைத்து வரும் இன்னொரு இலங்கை தமிழரான கரு பழனியப்பன் அவருக்கு கிருபாநிதி என்ற பெயரையும் அதற்குரிய ஆவணங்களையும் கொடுத்து அந்த பெயரில் அகதி முகாமில் தங்க அரசுக்கு விண்ணப்பிக்கும்படி அவரிடம் ஆலோசனை கூறுகிறார். ஆனால் பின்பு அதுவே ஆபத்தாக மாறுகிறது. 

இதனையடுத்து விஜய்சேதுபதியை தீர்த்து கட்ட போலீஸ் அதிகாரி மகிழ் திருமேனி தேடி அலைகிறார். அதுமட்டுமல்லாது இன்னொரு புறம் விஜய்சேதுபதியை ஒரு தலையாக காதலிக்கும் மேகா ஆகாஷ் அவரை லண்டன் இசைபோட்டியில் பங்கேற்க வைக்க பல முயற்சிகளை செய்கிறார். எனவே கிருபாநிதி யார்? எதற்காக விஜய்சேதுபதியை மகிழ் திருமேனி கொலை செய்ய துடிக்கிறார். லண்டன் இசை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற விஜய்சேதுபதி கனவு பலித்ததா? என்பதற்கு விடையாக இப்படத்தினுடைய மீதி கதை அமைந்துள்ளது. 


நடிகர்களின் நடிப்பு 

விஜய்சேதுபதிக்கு அகதி என்ற அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர் சிறப்பாக செய்து இருக்கிறார். அதாவது சாந்தமான முகம், அன்பான பேச்சு, சத்தங்களை கேட்டு நிலை குலைதல், தனக்குரிய அடையாளம் தேடி அலைதல் என்று அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

அதுமட்டுமல்லாது லண்டன் இசை அரங்கில் அகதிகளின் துயரங்களை வெளிப்படுத்தும்போது படம் பார்க்கும் இதயங்களை கனக்க வைக்கிறார். அதேபோல் அகதிகள் நிலை குறித்து உலக நாடுகள் கவனத்துக்காக அவர் பேசும் வசனம் சிந்திக்கவும் கைதட்டவும் வைக்கிறது. 

இவரைப் போலவே மேகா ஆகாஷ் அழகிலும், நடிப்பிலும் வசீகரிக்கிறார். அவரை இன்னும் இப்படத்தில் பயன்படுத்தி இருக்கலாம். 

மேலும் மகிழ் திருமேனி மிடுக்கான போலீஸ் அதிகாரியாக வந்து விஜய்சேதுபதியை கொல்ல வெறித்தனம் காட்டுகிறார். 

அதேபோல் சின்னி ஜெயந்த் சிறிது நேரம் வந்தாலும் அனுபவ நடிப்பால் மனதில் நிற்கிறார். 

அதுமட்டுமல்லாது மறைந்த நடிகர் விவேக் குணசித்திர நடிப்பால் கவனம் பெறுகிறார். 

இவர்களை போலவே மோகன்ராஜா, கரு பழனியப்பன், ராஜேஷ், கனிகா, தபியா மதுரா, ரித்விகா, இமான் அண்ணாச்சி, அஜய்ரத்னம், சம்பத்ராம் ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர். 


பலம் 

ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதி கதை விறுவிறுப்பாக செல்கிறது. விவேக் பிரசன்னா இசை பலம். வெற்றி வேல் மகேந்திரன் கேமரா யுத்த களம், கடல், காடுகள், நகரம் என்று பல இடங்களில் சுழன்றுள்ளது. 

மேலும் இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்வியல் போராட்ட வலிகளை திரையில் உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திய இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்தின் சமூக அக்கறையை பாராட்டலாம்


தொகுப்பு 

மொத்தத்தில் அகதிகளாக வாழும் மக்களின் வாழ்க்கையின் வலிகளை சொன்ன ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரவேற்கத்தக்க படங்களில் ஒன்று என்று தான் கூற வேண்டும்.


Advertisement

Advertisement

Advertisement