சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவரும் பெரிய திரையில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவருமான பிஜிலி ரமேஷ் தற்போது உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ’நான் மற்றவர்களுக்கு அட்வைஸ் சொல்லும் நிலையில் இல்லை’ என்றும் ’குடியினால் என் வாழ்க்கை சீர் அழிந்தது என்றும் சமீபத்தில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிஜிலி ரமேஷ், ஆரம்பத்தில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தார். அதன் பின்னர் சின்னத்திரையில் ’குக் வித் கோமாளி’ உட்பட ஒரு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார் என்பதும் ’நட்பே துணை’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அவர் சின்னத்திரை, பெரிய திரை எதிலும் நடிக்காத நிலையில் அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி அளித்த போது, ‘எப்போதோ அருந்திய மது, இப்போது வேலை செய்து, உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறேன்’ என்றும் தெரிவித்தார்.
இப்போது நான் மது அருந்துவதில்லை, ஆனால் இதற்கு முன் நான் அருந்திய மது இப்போது வேலை செய்து என்னுடைய உடலை கெடுத்து விட்டது’ என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பெற்றவர்கள் சொன்னாலோ அல்லது மனைவி சொன்னாலோ இந்த காலத்தில் யாரும் கேட்க மாட்டார்கள், பட்டால் தான் தெரியும், இருந்தாலும் என்னை பார்த்து தயவுசெய்து குடிப்பழக்கம் இருந்தால் அதை மறந்து விடுங்கள், குடிப்பழக்கம் உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் என்று கூறினார்.
எனக்கு அட்வைஸ் சொல்ல தகுதி இல்லை என்றாலும் என்னை பார்த்து மது பழக்கம் உள்ளவர்கள் திருந்தி கொள்ளுங்கள். நான் நன்றாக இருந்தபோது நண்பர்கள் என்னை தேடி வருவார்கள், ஆனால் இப்போது நான் படுத்த படுக்கையாக இருக்கும் போது ஒருவர் கூட என்னை தேடி வரவில்லை. யூடியூப் சேனல்கள் மட்டும் அவ்வப்போது வந்து என்னிடம் பேட்டி எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். ஆனால் நண்பர்கள் என்று கூறப்பட்டவர்கள் ஒருவரும் என் பக்கமே வரவில்லை’ என்று கண்ணீர் தழும்ப கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Listen News!