தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த கவின்குமார் (26), சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர். அவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, நெல்லை பாளையங்கோட்டையில் காதல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மர்மமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், இக்கொலை சுர்ஜித் என்ற இளைஞரால் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்தது. சுர்ஜித் தனது அக்காள் மற்றும் கவின்குமாருக்கு இடையிலான காதலை எதிர்த்து, அவரை காதலை கைவிடுமாறு கூறியதாகவும், மறுப்பை தொடர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் இருவரும் மணிமுத்தாறு பட்டாலியனில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பொலிஸார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது சாதிய ஆணவக்கொலைவாக சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், பல்வேறு பிரபலங்கள் தனது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், எக்ஸ் தள பக்கத்தில், “தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்” என பதிவு செய்து தனது கண்டனத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீதிக்காக பல அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
Listen News!