தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு காமெடி நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
தற்போதைய காலங்களையும் விட பழைய படங்களில் நடித்த காமெடி நடிகர்களின் நடிப்பு வியக்கத்தக்க வகையில் காணப்பட்டது. சந்திரபாபு தொடங்கி இன்றைய நடிகர்கள் வரை காமெடியில் பலர் கலக்கியுள்ளனர்.
இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் நாகேஷ். இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கு கூட நாகேஷ் பரிட்சயம் தான். ஆனால் குறைவாக படங்களில் நடித்திருந்தாலும் தனது நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்தவர் சுருளி ராஜன்.
1938-ம் ஆண்டு தேனி மாவட்டத்தில் பிறந்த சுருளி ராஜன், சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால், தனது அண்ணனின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார். அதன்பிறகு ஒரு மெக்கானிக் செட்டில் வேலை பார்த்த இவர் சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தினால் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடியுள்ளார்.
பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, கருணாநிதி வசனத்தில் நடத்தப்பட்ட காகிதப்பூ என்ற நாடகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நாடகமும் வெற்றி பெற்ற நிலையில், சுருளி ராஜனின் நடிப்பும் பாராட்டுக்களை பெற்றது. இதனிடையே காகிதப்பூ நாடகத்தை பார்க்க வந்த நடிகர் ஜெய்சங்கர், தனது முதல் படமாக இரவும் பகலும் என்ற படத்தில் சுருளி ராஜனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
இந்த படம் 1964-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதே தினத்தில் வெளியான எம்.ஜி.ஆர் நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்திலும் சுருளி ராஜன் நடித்திருந்தார்.
இரவும் பகலும் படத்தில் நடித்ததன் மூலம் ஜெய்சங்கர் சுருளி ராஜன் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்ட நிலையில், அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களில் சுருளி ராஜனுக்கு வாய்ப்பு கொடுத்து வந்தார் ஜெய்சங்கர்.
இதில் ஆதிபராசக்தி என்ற படத்தில் மெட்ராஸ் பாஷை பேசி நடித்த சுருளி ராஜனின் நடிப்பு வெகுவாக பாராட்டுக்களை பெற்ற நிலையில், அதன்பிறகு அடுத்தடுத்த படங்களில் தனது காமெடி காட்சிகளின் மூலம் வரவேற்பை பெற்றார் சுருளி ராஜன்.
அதன்பிறகு முன்னணி நடிகர்கள் படங்கள் மட்டுமல்லாமல் புது நடிகர்களின் படங்களிலும் காமெடி வேடங்களில் கலக்கிய சுருளி ராஜனுக்கு, சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்தும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடம் மற்றும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சுருளி ராஜன் 1980-ம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் அன்புக்கு நான் அடிமை படத்தின் ரஜினிகாந்தை கண்கானிக்கும் ஆபீசராக நடித்திருப்பார்.
அதே ஆண்டு அன்புக்கு நான் அடிமை படத்தை தவிர, எல்லாமே உன் கைராசி, ஜானி, காளி, முரட்டுக்காளை, நான் போட்ட சவால், பொல்லாதவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதே போல் சுதாகர், தீபா நடிப்பில் வெளியான மாந்தோப்பு கிளியே என்ற படம் சுருளி ராஜனின் காமெடி காட்சிகளுக்காகவே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. சிவாஜியின் ஹிட்லர் உமாநாத் என்ற படத்தில் சுருளிராஜனின் வில்லுப்பாட்டு பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வந்த சுருளி ராஜன், கடந்த 1980-ம் ஆண்டு மட்டும் சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் பல படங்களில் அவரின் காமெடி காட்சிகள் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் அதிக படங்களில் நடித்த சுருளி ராஜன் ஏவியமின் முரட்டுக்களை படத்தில் ஒரு முக்கிய கேரக்டருக்கு யாரை போடலாம் என்று யோசித்தபோது அந்த கேரக்டருக்கு சுருளி ராஜன் சரியாக இருப்பார் என்று அந்த வாய்ப்பை அவரின் நண்பரான ஜெய்சங்கர் வாங்கி கொடுத்துள்ளார்.
காமெடியில் தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்ட சுருளிராஜன் அதற்காக தனது குரலையும் ஆயுதமாக பயன்படுத்திக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
யார் மெமிக்ரி செய்தாலும் இது சுருளிராஜன் குரல் என்று எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய குரலாக இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
பல படங்களில் தனது காமெடி மூலம் ரசிகர்களை சிரிக்க வைத்த இந்த மகா கலைஞன் தனது 43-வது வயதில் 1980-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
சுருளி ராஜனின் தனித்தன்மையான குரலில் நடிகர் விவேக் வாடா என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!