பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமான தகவல் தமிழ் திரை உலகினர்களை மட்டும் இன்றி தென்னிந்திய திரை உலகினர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அவரது இறுதி சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவரது பழைய பேட்டிகளின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் ’பைரவா’ படத்தில் நடிக்கும் போது டேனியல் பாலாஜி, விஜய் பேச்சை கூட கேட்காமல் நடந்து கொண்ட சம்பவம் ஒன்று தெரிய வந்துள்ளது. பைரவா படத்தில் ஒரு காட்சிக்காக டேனியல் பாலாஜி மொட்டை அடிக்க வேண்டும் என்று இயக்குனர் பரதன் கூறியுள்ளார். டேனியல் பாலாஜி என்றாலே அவரது நீண்ட தலைமுடி தான் ரசிகர்களுக்கு ஞாபகம் வரும் என்ற நிலையில், மொட்டை அடிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்னதும் விஜய் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து விட்டாராம்.
அதெல்லாம் முடியாது என்று இயக்குனரிடம் சொல்லி விடுங்கள், மொட்டை அடித்தால் உங்களுக்கு மற்ற படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று விஜய் கூறிய நிலையிலும், அடுத்த நாள் விஜய் பேச்சை கூட கேட்காமல், மொட்டையுடன் டேனியல் பாலாஜி வந்தது விஜய்க்கே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ’வேட்டையாடு விளையாடு’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்தபோது பிணத்திற்கு மேக்கப் போட வேண்டியிருந்ததாகவும் அமெரிக்கா மேக்கப் கலைஞர்கள் மிகப்பெரிய உதவி கேட்டதால் கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளர் யோசித்து கொண்டு இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்போது ’எனக்கு நன்றாக மேக்கப் போட வரும், நான் பிணத்திற்கு மேக்கப் போடுகிறேன் என்று கூறிய அவர் அருகில் உள்ள கடையில் மேக்கப் சம்பந்தமான பொருட்களை வாங்கி வந்து வெறும் 100 டாலர் மட்டுமே பெற்றுக் கொண்டு மேக்கப் போட்டு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இன்றி வெற்றிமாறன் இயக்கிய ‘அசுரன்’ படத்திலும், ‘விடுதலை’ படத்திற்கும் பிணங்களுக்கு மேக்கப் போட்டதாகவும் அவர் இன்னொரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் மட்டுமின்றி அவர் நல்ல மேக்கப் கலைஞர் என்பதும் அதேபோல் அவர் பல படங்களில் உதவி இயக்குனர் அளவுக்கு இயக்குனர்களுக்கு உதவியாய் இருந்து உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் டேனியல் பாலாஜியின் கனவாக இருந்தது என்றும் ஆனால் கடைசிவரை அந்த கனவு நினைவாக வில்லை என்றும் கூறப்படுகிறது.
Listen News!