பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இழுத்துவரப்பட்டுள்ளார். இதில், அமலாக்கத்துறை (ED) அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 16ம் தேதி விசாரணைக்காக ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு 'சிங் சாப் தி கிரேட்' திரைப்படத்தின் மூலம் ஹிந்தி திரைத்துறையில் அறிமுகமான ஊர்வசி, தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த 'டாகு மகாராஜ்' படத்திலும் நடித்திருந்தார்.
அண்மையில் ஆன்லைன் சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்தியதாக பல பிரபலங்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோர் ஏற்கனவே விசாரணைக்காக சம்மன் அனுப்பப்பட்டு, வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இதே வழக்கில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடமும் சமீபத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சூதாட்ட செயலி தொடர்பான விளம்பரங்கள் மூலம் பெரும் அளவில் நிதி பரிவர்த்தனைகள் நடந்ததா, அவை பண மோசடியுடன் தொடர்புடையதா என்பதை ஆராயும் நோக்கில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
Listen News!