தமிழ், தெலுங்கு மற்றும் பல்வேறு மொழிகளில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை திரிஷா, தனது திரைப்பயணத்தில் 22 ஆண்டுகளைக் கடந்தும் முன்னணி நடிகையாக அசைக்க முடியாத புகழ்பெற்று உள்ளார். 2002ம் ஆண்டு வெளியான ‘மெளனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது தக் லைஃப் , குட் பேட் அக்லி போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள திரிஷா, அவரது முந்தைய படங்களுக்காகத் தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகின்றார். இதனிடையே, நடிகை திரிஷா நடிப்பில் வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் மகேஷ் பாபு மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘அத்தடு’ திரைப்படம், தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஹிட் திரைப்படங்களில் ஒன்றாக காணப்பட்டது. 2005ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் த்ரில்லர் மற்றும் எமோஷனல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த படம் வெளியான போது, தெலுங்கு மாநிலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியானது.
மேலும் இதுவரை உலகளவில் எந்த திரைப்படமும் இத்தனை முறை ஒளிபரப்பாகாத நிலையில், 1,500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் திரைப்படமாக ‘அத்தடு’ புதிய சாதனையை படைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படம், இன்று வரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது என்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்த சாதனை திரிஷாவின் வாழ்க்கையில் புதிய அத்தியாயமாகவே அமைகின்றது.
Listen News!