• Jun 18 2026

15 வயசுல இருந்தே அசிங்கப்படுத்துறாங்க.. திருநங்கை பற்றிய கேலி... மனம் திறந்த குஷ்பு மகள்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரபல ஜோடியான நடிகை குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர் சி ஆகியோரின் மகள் தான் ஆனந்திதா. இவர் சமீபத்தில் அஸ்வின் கந்தசாமி இயக்கிய ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் மூலம் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

சமீப ஆண்டுகளில் ஆனந்திதாவின் உடல் எடை குறைந்தது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவின. சிலர் அறுவை சிகிச்சை அல்லது உடல் எடை குறைக்கும் மருந்துகள் காரணமாகவே இந்த மாற்றம் ஏற்பட்டதாக கூறியிருந்தனர்.

இந்த நிலையில்,  சமூக வலைதளங்களில் பல ஆண்டுகளாக தன்னை நோக்கி வந்த விமர்சனங்கள் மற்றும் கேலி கிண்டல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் ஆனந்திதா சுந்தர்.

குறிப்பாக தனது தோற்றம் மற்றும் உடல் எடை குறித்து தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்ததாகவும், அது தனது இளமைக் காலத்தில் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.


அதன்படி அவர் கூறுகையில், என் உடல் எடை ஒரே நாளில் குறையவில்லை. 2018 அல்லது 2019-ல் தொடங்கிய பயணம் இது. இன்றைய நிலையை அடைய எனக்கு ஏழு ஆண்டுகள் ஆனது. கொரோனா காலத்தில் நாங்கள் வெளியே அதிகம் தெரியாததால், மக்கள் திடீரென்று மாற்றம் ஏற்பட்டதாக நினைத்துவிட்டார்கள். ஆனால் இது பல ஆண்டுகளாக நான் எடுத்த முயற்சியின் விளைவு  என்றார்.

மேலும், தானும் தனது சகோதரி அவந்திகாவும் சிறு வயதிலிருந்தே உடல் எடை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை சந்தித்ததாகவும், அதனால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்க்கை முறையை தேர்வு செய்ததாகவும் கூறினார்.

அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் சிலர் தன்னை திருநங்கைகளுடன் ஒப்பிட்டு கேலி செய்வதையும் ஆனந்திதா கண்டித்தார்.

“திருநங்கைகள் மிகவும் அழகானவர்களும் அன்பானவர்களும். அவர்களை ஒப்பிட்டு என்னை அவமதிக்க முயற்சிப்பது என்னை மட்டுமல்ல, அவர்களையும் அவமதிப்பதாகும். அது அறியாமையையும் வெறுப்பையும் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

மேலும், “நான் ஒரு பெண். யாரையும் காயப்படுத்தாமல் வாழ முயற்சிக்கிறேன். ஆனால் நான் புகைப்படம் ஒன்றை வெளியிட்டால் கூட, பெரும்பாலான கருத்துக்கள் என் தோற்றத்தை விமர்சிப்பதாகவே இருக்கும். இன்று அதை எதிர்கொள்ளும் மன வலிமை எனக்கு வந்துவிட்டது. ஆனால் ஒரு குழந்தை வயதில் இவ்வளவு வெறுப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை மிகவும் வேதனையானது” என்றும் ஆனந்திதா உருக்கமாக பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு தனது மகளுக்கு ஆதரவு தெரிவித்து, “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று இதய எமோஜிகளுடன் பதிவு வெளியிட்டுள்ளார்.


 

Advertisement

Advertisement