2023 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் ‘மகாநதி’. இது ஒரு தாயும் அவரது நான்கு மகள்களும் சந்திக்கும் வாழ்க்கை போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. குடும்ப பாசம், காதல், திருமணம், தியாகம், உறவுச் சிக்கல்கள் மற்றும் பெண்களின் தன்னம்பிக்கை போன்ற பல உணர்வுகளை கலந்து நகர்ந்த இந்த தொடர், இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பான ‘மகாநதி’, தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது. இந்த தொடர், பல வாரங்களில் TRP பட்டியலில் முன்னணி இடங்களையும் பிடித்துள்ளது.
காவேரி, கங்கை, யமுனா மற்றும் நர்மதா என நான்கு சகோதரிகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு நகர்ந்த கதை, தற்போது ஒவ்வொருவரின் திருமண வாழ்க்கை, குடும்ப பொறுப்புகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட சவால்களை சுற்றி நகர்ந்து வந்தது.
இதில் காவேரி கதாபாத்திரம் தொடக்கம் முதலே ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த ஒன்றாக உள்ளது. அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த போராட்டங்கள், காதல் சம்பவங்கள் மற்றும் குடும்ப பொறுப்புகள், தொடரை உணர்வுபூர்வமாக இணைத்த முக்கிய அம்சமாக இருந்தது.

தற்போது தொடரின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காவேரியின் வாழ்க்கை எப்படி முடிவடையும், குடும்பம் மீண்டும் ஒன்றாக இணையுமா, புதிய திருப்பங்கள் வருமா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றன.
மேலும் கதையில் இடம்பெறும் கம்ருதீன் என்ற புதிய பாத்திரத்தின் வருகை, இறுதி கட்ட கதையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மகாநதி தொடரின் இறுதி அத்தியாயம் சாதாரண முடிவாக இருக்காது என்றும், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு பெரிய திருப்பத்துடன் நிறைவடையலாம் என்றும் பேசப்படுகிறது. மூன்றரை ஆண்டுகளாக ரசிகர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்த இந்த தொடர், உணர்ச்சிமிக்க முடிவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது நிறைவுக்கு வரவுள்ள மகாநதி தொடருக்கு இரண்டாவது அத்தியாயம் வருமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த தொடரின் வெற்றி, கதாபாத்திரங்களின் பிரபலம் மற்றும் ரசிகர்களின் இணைப்பு காரணமாக, புதிய சீசன் வர வாய்ப்பு இருக்கலாம் என்ற பேச்சு சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பித்தக்கது..
Listen News!