தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பல ஆண்டுகளாக ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்த நடிகர் விஜய், தற்போது தனது அரசியல் களத்திலும் களமிறங்கி வெற்றி பெற்று முதலமைச்சராக ஆட்சி நடத்தி வருகிறார்.
இதனால் திரையுலகிலும் அரசியல் களத்திலும் ஒரே நேரத்தில் பேசப்படும் நபராக விஜய் மாறியுள்ளார். இவரின் இறுதி திரைப்படமான ‘ஜனநாயகன்’ குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முதலில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 19 அல்லது ஜூன் 22 ஆம் தேதியை ஒட்டி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக தகவல்கள் வெளியானது. குறிப்பாக பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் படத்தின் வெளியீட்டையும் இணைத்து ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளிக்க தயாரிப்புக் குழு முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக சென்சார் சான்றிதழ் பெறும் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, திட்டமிடப்பட்ட தேதியில் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றமும் குழப்பமும் நிலவுகிறது.
தற்போது ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் டெல்லியில் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையான அனுமதிகள் விரைவாக கிடைத்தால், ஜூன் 26 ஆம் தேதி படத்தை திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சென்சார் நடைமுறைகளில் மேலும் தாமதம் ஏற்பட்டால், படத்தின் வெளியீடு ஜூலை முதல் வாரத்திற்கு தள்ளிப்போகும் வாய்ப்பும் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் அதிகபட்சமாக ஜூலை 3 ஆம் தேதி திரைப்படம் வெளியாகலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.
விஜயின் அரசியல் பயணத்துடன் தொடர்புபடுத்தி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக ‘ஜனநாயகன்’ கருதப்படுகிறது. இதனால் படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
எனவே ஜனநாயகன் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்புக் குழு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை ‘ஜனநாயகன்’ எந்த தேதியில் வெளியாகும் என்ற கேள்வியே ரசிகர்களிடையே மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.
Listen News!