மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வில் திடீர் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை சுவேதா மேனன், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனுடன், சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அவர் தெரிவித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நடைபெற்ற ‘அம்மா’ அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், பொதுச்செயலாளர் கே.பி. பரமேஸ்வரன் வருடாந்திர அறிக்கையை தாக்கல் செய்தார். அறிக்கை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணக்கு விவரங்கள் தொடர்பான விவாதம் தீவிரமடைந்த நிலையில், சங்கத்தின் தற்போதைய நிர்வாகம் மீது பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தலைவராக தொடர்வது பொருத்தமல்ல என கருதிய சுவேதா மேனன் தனது ராஜினாமா முடிவை அறிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும், அவரது தலைமையிலான 17 பேர் கொண்ட செயற்குழுவும் ஒரே நேரத்தில் பதவி விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டராஜினாமா மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ‘அம்மா’ அமைப்பின் அடுத்தகட்ட நிர்வாகம் மற்றும் புதிய தலைமை குறித்த முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!