தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும் கவனத்தை ஈர்த்தது. இதில் விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், விரைவில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சட்டப்பேரவைக்கு செல்லும் தவெக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 107 ஆக காணப்பட்டது.

ஆட்சியமைக்க 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவையாக இருப்பதால், தவெக பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரியது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு வழங்கியது. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது ஆதரவை அறிவித்தன. இதன் மூலம் தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்தது.
இன்னும் இரண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், விசிகவிடம் முக்கிய எதிர்பார்ப்பு உருவானது. விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஆதரவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கட்சி அலுவலகம் முன்பு தவெக மற்றும் விசிக தொண்டர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.
இந்நிலையில், விசிக தனது முடிவை அறிவித்து தமிழக வெற்றிக் கழகத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ கடிதம் ஆதவ் அர்ஜுனாவிடம் வழங்கப்பட்டது. இந்த ஆதரவுடன் தவெகவின் பலம் 118 எம்.எல்.ஏக்களை எட்டியுள்ளது.
இதையடுத்து, விஜய் ஆளுநர் அலுவலகரை இன்று நான்காவது முறையாக சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் திருமாவளவனை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த அரசியல் மாற்றம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!