• Apr 15 2026

புரட்சித் தலைவர் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜேந்திர பிரசாத்.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரைப்பட உலகின் பிரபல நடிகரான ராஜேந்திர பிரசாத் அண்மையில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தற்போது அதற்காக மன்னிப்பு கோரி விளக்கம் அளித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முக்கியமான நபராகவும் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சராகவும் விளங்கிய M. G. R குறித்து அவர் கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.


சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில், மறைந்த தெலுங்கு நடிகர் Kantha Rao அவர்களின் பெயரில் வழங்கப்பட்ட விருதை ராஜேந்திர பிரசாத் பெற்றார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய போது, காந்தா ராவ் கத்தி சண்டை செய்வதில் மிகவும் திறமையானவர் என்று கூறிய அவர், “காந்தா ராவ் கத்தி சண்டை செய்வதைப் பார்த்தால் MGR கூட பயந்து போவார்.” என்று நகைச்சுவையாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பலரும் இதை விமர்சித்தனர். குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் MGR ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த விவகாரம் அதிகம் பேசப்பட்ட நிலையில், நடிகர் சங்கம் சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் நடிகர் விஷால் தனது எக்ஸ் (X) தளப்பதிவில், “ஒரு நடிகரைப் புகழ்வதற்காக மற்றொரு நடிகரை இகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜேந்திர பிரசாத் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் ராஜேந்திர பிரசாத் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது தரப்பை விளக்கியுள்ளார். அந்த வீடியோவில், இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விழாவில் காந்தா ராவ் பெயரில் வழங்கப்பட்ட விருதை பெற்றபோது தான் கூறிய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “நான் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், மூத்த நடிகர் காந்தா ராவ் பெயரில் வழங்கப்பட்ட விருதை பெற்றேன். அந்த நிகழ்ச்சியில் பேசும் போது நான் நகைச்சுவையாக கூறிய ஒரு கருத்து தற்போது பெரிதாக பேசப்படுகிறது. தமிழ் சினிமாவின் கடவுளாக நான் பார்க்கும் முன்னாள் முதலமைச்சர் MGR குறித்து நான் தவறாக பேசுவேனா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நான் மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த MGR அங்கு வந்து மாணவர்கள் எப்படி நடிப்பு கற்றுக் கொள்கிறார்கள் என்பதை பார்த்துச் சென்றார். அந்த அளவுக்கு அவரை நான் மிகவும் மதிக்கிறேன். அவரை விமர்சிக்கும் இடத்தில் நான் ஒருபோதும் இருக்க மாட்டேன்” என்று கூறினார்.

அதே நேரத்தில், “என்னுடைய வார்த்தைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இனி வாழ்க்கையில் இப்படிப்பட்ட கருத்துகளை நான் கூற மாட்டேன். இந்த தவறை மன்னித்து இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விடுங்கள்.” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட இந்த மன்னிப்பு வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

Advertisement

Advertisement