• Jun 24 2026

பாராட்டுகள் குவிந்தும் காத்து வாங்கும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன்.. மொத்த வசூல் இவ்வளவு தானா?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பெரிய நட்சத்திரங்களின் மாஸ் காட்சிகளோ, அதிரடி சண்டைக் காட்சிகளோ இல்லாமல் ஒரு சமூக கருத்தை மையமாக வைத்து உருவான திரைப்படமாக கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது நூறு சாமி. 

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி தயாரித்து நடித்த இந்த திரைப்படம், விதவை மறுமணம் என்ற அரிதாக பேசப்படும் ஒரு சமூக பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

படம் வெளியானதும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக நடிகை சுவாசிகாவின் நடிப்பு பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. பெண்களின் மனநிலையையும், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பார்வைகளையும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் பாராட்டுகள் கிடைத்த அளவுக்கு பாக்ஸ் ஆபீஸில் வசூல் கிடைக்கவில்லை என்பதே தற்போது திரையுலகில் பேசப்படும் முக்கிய விஷயமாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் படத்தைப் பாராட்டிய பலரும், குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று பார்க்கும் அளவுக்கு ஆர்வம் காட்டவில்லை என திரையரங்கு வட்டாரங்கள் கூறுகின்றன.


கணவனை இழந்த பெண் ஒருவரின் வாழ்க்கை, அவருக்கான மறுமணம் மற்றும் அதை ஏற்றுக்கொள்ளும் குடும்பத்தின் மனநிலையை மையமாகக் கொண்டு நகரும் கதையை இயக்குநர் சசி மிகவும் யதார்த்தமாக கையாண்டிருந்தார். குறிப்பாக தனது தாயின் வாழ்க்கையை மீண்டும் மலரச் செய்ய முயலும் மகன்களின் பயணம் படத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.

ஆனால் இந்த கதைக்களம் ஒரு வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படம் அல்ல என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உருவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடும்ப ரசிகர்களின் வருகை எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,  நூறு சாமி படம் வெளியான ஐந்து நாட்களில் சுமார் 4.80 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய் ஆண்டனி - சசி கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தின் வசூலுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாக பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் வாரங்களில் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ‘நூறு சாமி’ திரைப்படத்தின் திரையிடல் எண்ணிக்கையும் வசூலும் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.


Advertisement

Advertisement