சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் தனது பழைய கல்வி நிலையமான கோயம்புத்தூரை சேர்ந்த பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரிக்கு நேரில் சென்றார்.
2003 முதல் 2006 வரை இக்கல்லூரியில் படித்திருந்த லோகேஷ், இப்போது ஒரு முன்னணி இயக்குநராக வளர்ந்ததை நினைவுகூரும் விதமாக மாணவர்களுடன் நேரடியாக சந்தித்து பேசினார். 'கூலி' திரைப்படம் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்ததோடு, தனது எதிர்கால திட்டங்களையும் மாணவர்களுக்கு விளக்கினார்.
நடிகர் சூர்யாவுடன் பணியாற்றும் வாய்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், "நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவரின் பல திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்துள்ளேன். அவருடன் பணியாற்றுவது எனது கனவு. நேரம் சரியாக அமையும் போது, நிச்சயமாக அவரை வைத்து படம் எடுக்க விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அதே சமயம், ‘LCU’ படத்தொடரில் விஜய் மீண்டும் நடிக்க வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது, "LCU, விஜய் அண்ணா இல்லாமல் முழுமையடையாது. ஆனால் அவர் தற்போது அரசியலில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால், திரும்புவாரா இல்லையா என்பது அவர் சொல்ல வேண்டிய விஷயம்" எனத் தெரிவித்தார்.
Listen News!