விஜய் டிவியின் நீண்ட நாள் சாதனை நிகழ்ச்சியான "நீயா நானா", சாதாரண மக்களின் கருத்து மோதல்களை நேர்மையாகவும், நேரடியாகவும் வெளிப்படுத்தும் ஒரு மேடையாக திகழ்ந்து வருகிறது. இதுவரை பல்வேறு சமூக, அரசியல், கலாச்சார பிரச்சனைகள் குறித்து விவாதங்களை மேற்கொண்டு வந்த இந்த நிகழ்ச்சி, தற்போது ஒரு புதிய தலைப்பால் பரபரப்பாக மாறியுள்ளது.
இந்தத் தலைப்பில் நடைபெற்ற சமீபத்திய எபிசோட் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சியில், ‘டாக் லவ்வர்ஸ்’ மற்றும் ‘டாக் ஹேட்டர்ஸ்’ என இரண்டு குழுக்கள் பிரிந்து, தெரு நாய்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும், நாய்களை காப்பாற்றும் உரிமை மற்றும் பாதுகாப்பும் குறித்தும் பல்வேறு கோணங்களில் வாதிட்டனர்.
தெரு நாய்கள் தொடர்பான பிரச்சனை, குறிப்பாக நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் அருகாமையான ஒன்றாகவே உள்ளது. சிலர் அவற்றை உயிர்களாகக் கருதி உணவளித்து பராமரிக்கின்றனர். மற்றொருபக்கம், குழந்தைகள், மூத்தவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உயிர் பாதுகாப்புக்கே ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தெருநாய்கள் நடமாடும் சம்பவங்களும் நிகழ்கின்றன.
இதனால் இந்த விவாதம் உண்மையில் சமுதாயத்தில் ஒரு முக்கியமான கருத்து மோதலை வெளிப்படுத்தியது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதிலிருந்து, பல சமூக வலைத்தளங்களில் இந்த விவாதம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. டாக் லவ்வர்ஸ் மற்றும் டாக் ஹேட்டர்ஸ் எனும் இரு பாகங்களும் தங்கள் கருத்துகளை வலிமையாக பகிர்ந்தனர்.
இவ்வாறு சர்ச்சையாக வளர்ந்த "தெரு நாய்கள் விவாதம்" தொடர்பாக, ஒரு செய்தியாளர் நடிகர் கமல்ஹாசனிடம் "தெரு நாய் தொல்லைக்கு தீர்வு என்ன?" எனக் கேட்டார்.
அதற்குக் கமல்ஹாசன் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது. கமல் அதன்போது, "தீர்வு ரொம்ப சிம்பிள். விஷயம் தெரிந்தவர்கள், உலகம் சரித்திரம் தெரிந்தவர்கள், சமூக சுகாதாரம் என்ன என்பதை தெரிந்தவர்கள்... கழுதை எங்கே காணோம் என யாராவது கவலைப்படுறாங்களா?
கழுதைகள் எல்லாம் காணாமல் போய்விட்டதே. நமக்காக எவ்வளவு பொதி சுமந்து இருக்கிறது. இப்போ பார்க்க முடியாது கழுதையை. யாராவது கழுதையை காப்பாத்தணும்னு பேசுறாங்களா? எல்லா உயிர்களையும் காப்பாத்தணும். எவ்வளவு முடியுமோ காப்பாத்தணும். அவ்வளவுதான் என்கருத்து!" என்று கூறியுள்ளார்.
Listen News!