தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகருமான கே. ராஜன் (வயது 85) சென்னை அடையாறு கூவம் ஆற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் அவரது உடலை மீட்டுள்ளதாகவும், தற்போது அவருடைய சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவர் 1983ஆம் ஆண்டு வெளியான “பிரம்மச்சாரிகள்” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் “நம்ம ஊரு மாரியம்மா” உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குனராகவும் பணியாற்றினார். மேலும் சில படங்களில் எழுத்தாளராகவும், நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.
திரைத்துறை தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பணியாற்றிய இவர், திரைப்படத்துறை பிரச்சனைகள், நடிகர்களின் சம்பளம், தயாரிப்பாளர்களின் நஷ்டம் உள்ளிட்ட விஷயங்களில் வெளிப்படையாக பேசும் நபராக அறியப்பட்டவர். அவரது இந்த துயரமான மரணம் தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் கே. ராஜன் உயிரிழந்த சம்பவத்தில் அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகிக் கொண்டுள்ளன. அதன்படி தற்போது வெளியான தகவலின் படி,
தயாரிப்பாளர் கே. ராஜன் சில காலமாக குடும்பத்துடன் தொடர்பு இல்லாமல் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து தனது டிரைவருடன் இறுதியாக காரில் சென்ற அவர், அடையாறு ஆற்றங்கரை அருகே வந்தபோது காரை நிறுத்தச் சொல்லி இறங்கியுள்ளார்.
அப்போது அவர் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாகவும், ஏதோ ஒரு ஆழ்ந்த சிந்தனையிலும் இருந்ததாகவும் டிரைவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அடையாறு ஆற்றங்கரைப் பாலத்தின் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரிடம், “காரை ஓரமா நிறுத்துப்பா... எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு. கொஞ்ச நேரம் காலாற நடந்துட்டு வரேன்...” என்று கூறியுள்ளார். இதுதான் கே. ராஜன் தனது கார் டிரைவரிடம் பேசிய கடைசி வார்த்தைகள் எனக் கூறப்படுகிறது.
இவ்வாறு நடைப்பயிற்சி செய்வதாக டிரைவரிடம் கூறிவிட்டு தனியாக சென்றுள்ளார். அதன் பின் திடீரென பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Listen News!