தமிழ் திரையுலகின் தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய், தனது கடைசி திரைப்படமாக அறிவித்துள்ள ‘ஜனநாயகன்’ படம், எதிர்வரும் 2026 ஜனவரி 9ஆம் திகதி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இசையமைப்பை அனிருத் கவனித்துள்ளார். விஜய்யுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைப்படம் வெளியாகும் முன்பே அதன் வணிகம் பெரும் சாதனையை எட்டியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் ரூ.121 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. இதனால், ஒரே திரைப்படத்திற்கு கிடைத்த மிக உயர்ந்த தொகையாக இந்த ஒப்பந்தம் பதிவாகியுள்ளது.
ஓடிடி வியாபாரத்தில் சாதனை படைத்து, ரூ.121 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் உரிமம் கைப்பற்றிய நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமம் இதுவரை விற்பனை ஆகவில்லை.
பொதுவாக பெரிய படங்களின் உரிமத்தை வாங்கி வரும் சன் டிவி, சில அரசியல் காரணங்களால் ‘ஜனநாயகன்’ படத்தை வாங்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், விஜய் டிவி சாட்டிலைட் உரிமத்தை பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதுவரை எந்த உத்தியோகபூர்வ ஒப்பந்தமும் நிறைவேறாத நிலையில், இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனை எப்போது நடைபெறும் என்பது ரசிகர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!